சீனா தனது மற்றுமொரு ஆய்வு கப்பல் பிரவேசிப்பதற்கு இலங்கை மற்றும் மாலைத்தீவிடம் அனுமதி கோரியுள்ள நிலையில், இந்தியா கடும் ஆட்சேபனைகளை வெளியிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனவரி ஐந்தாம் திகதி முதல் மே மாதம் வரையில் தென்னிந்தியப் பெருங்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ள சீனா ஆய்வுக் கப்பலை அனுமதிக்க இந்த இரு நாடுகளிடமும் அனுமதி கோரியுள்ளது.
சீனாவின் Xiang Yang Hong 03 என்ற ஆய்வுக் கப்பல் தற்போது தென் சீனக் கடலில் தரித்திருப்பதுடன், அனுமதி பெற்ற பிறகு இந்த இரு நாடுகளுக்கும் மலாக்கா வழியாக பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கைக்கு வந்த சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 தனது ஆய்வை முடித்துவிட்டு டிசம்பர் இரண்டாம் திகதி சிங்கப்பூரை சென்றடைந்தது.
சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை கண்காணிப்பு கருவிகள் மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பு கப்பல்கள் இலங்கைக்குள் அனுமதிக்கப்படுவது குறித்து இந்தியா அச்சம் வெளிப்படுத்தியுள்ளது.
இந்த விடயம் குறித்து இந்திய பிரதமர் பிரதமர் நரேந்திர கடந்த ஜூலை 21ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்தரையாடியிருந்தார்.
கம்போடியாவிலிருந்து ஜிபூட்டி வரை கடற்படை தளங்களை நிறுவும் வகையில், கம்போடியா, மியான்மர், இலங்கை, பாகிஸ்தான், ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளின் துறைமுகங்களில் சீனா முதலீடு செய்துள்ளது.
எனினும், இது எதிர்கால கடற்படை நடவடிக்கைகளுக்கான மூலோபாய அணுகுமுறையைக் குறிக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடல் ஆய்வு என்ற போர்வையில், சீனா பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் மற்றுமொரு ஆய்வுக் கப்பலை இலங்கைக்கு அனுப்புவதற்கு சீனா அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.