தினேஷ் ஷாஃப்டர் கொலை குறித்து 4 பொலிஸ் குழு விசாரணை, 10 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு
பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 10க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டு தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் பொரளை பொது மயானத்தில் ஷாஃப்டர் தனது காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்றைய தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
குறித்த தினத்தன்று பிற்பகல் தினேஷ் ஷாஃப்டர் தனது இல்லத்திலிருந்து வெளியேறி முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸை சந்திப்பதற்காக பொரளைக்கு செல்வதாக தனது செயலாளரிடம் தெரிவித்திருந்தார்.
முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையின் தோமஸ் தினேஷ் ஷாஃப்டரிடமிருந்து 1.4 பில்லியனை பெற்றுக்கொண்டதாகவும், பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் பொலிஸாரிடம் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
தோமஸை சந்திக்கப் போவதாக தினேஷ் ஷாஃப்டர் தனது மனைவியிடம் கூறியிருந்ததால், தோமஸிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.