உலகக் கோப்பையை 3வது முறையாக கோப்பையை வென்றது அர்ஜென்டினா!

0
255

கத்தாரில் கடந்த மாதம் 20-ம் திகதி கோலாகலமாக தொடங்கிய 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நிறைவுக்கு வந்தது.

32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டம் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இரவு 8.30 மணிக்கு தொடங்கியது.

கோப்பையைக் கைப்பற்றும் இந்த போட்டியில் பிரான்சும், அர்ஜென்டினாவும் மோதின. ஆட்டம் தொடங்கிய 23-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி கேப்டன் மெஸ்சி தனது அணிக்கான முதல் கோலை அடித்து அந்நாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

தொடர்ந்து 36-வது நிமிடத்தில் ஏஞ்சல் டிமெரியா அர்ஜென்டினாவிற்கான 2-வது கோலை அடித்தார். இதன்மூலம் முதல் பாதி ஆட்ட முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெடினா முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கும் முயற்சியை பிரான்ஸ் வீரர்கள் தீவிரப்படுத்தினர். அதன்படி 80-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே தனது அணிக்கான முதல் கோலை அடித்தார்.

அடுத்த ஒரு நிமிடத்தில் மீண்டும் அவர் தமது அணிக்கு மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சம நிலையை எட்டியது. இதையடுத்து முதல் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இதனால் இரண்டாவதாக கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. 108வது நிமிடத்தில் மெஸ்சி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 3-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. 118-வது நிமிடத்தில் எம்பாப்பே தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார்.

இதையடுத்து இரு அணிகளும் 3-3 சமனிலை பெற்றன. எம்பாப்பே ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார். மூன்றாவது கூடுதல் நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் முறை வழங்கப்பட்டது.

இதில் 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்றாவது முறையாக அர்ஜென்டினா உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்படுகிறது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here