சர்வதேச வர்த்தகத்திற்கான சர்வதேச வர்த்தக அலுவலகம் ஸ்தாபிப்பு!

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைய சர்வதேச வர்த்தகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச வர்த்தகம் தொடர்பான நிறுவனங்களால் தனித்தனியாக மேற்கொள்ளப்படும் அணுகுமுறைகளில் காணப்படும் குறைபாடுகளைத் தவிர்ப்பதன் மூலமும் அதன் செயற்பாடுகளை மிகுந்த செயற்திறனுடனும் முறையாக மேற்கொள்ளும் வகையிலும் இந்த புதிய அலுவலகம் நிறுவப்படும்.

இதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, பொருளாதாரத்திற்கு சர்வதேச வர்த்தகத் துறைகளின் அதிகபட்ச பங்களிப்பினை வழங்க இதன் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருளாதார மறுமலர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படாது மறைந்து காணப்படும் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளின் திறனைப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படை அங்கமாகும். அதற்கமைய, முதலில் தெற்காசியாவுடன் இணைந்தும், பின்னர் கிழக்கு நோக்கி விஸ்தரிப்பதன் மூலம், சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவுடன் இணைந்து, இறுதியாக உலகின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் மக்கள்தொகையில் 30% உரிமையைக் கொண்டுள்ள “பிராந்திய விரிவான பொருளாதார கூட்டணி” (Regional Comprehensive Economic Partnership, RCEP) உடன் இணைவதே இலங்கையின் இலக்காகும்.

இதற்கு அடித்தளம் இடும் வகையில் சர்வதேச வர்த்தக அலுவலகம் பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்படும். இதற்காக சர்வதேச வர்த்தகத்தில் நிபுணத்துவம் பெற்ற புகழ்பெற்ற ஆலோசனைக் குழு நியமிக்கப்பட இருப்பதோடு சர்வதேச வர்த்தக தூதுவரால் இந்த அலுவலக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

இதனுடன் தொடர்புள்ள அனைத்து அமைப்புகளாலும் பரிந்துரைக்கப்படும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு நிறுவன கட்டமைப்பை இது கொண்டிருக்கும். சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை நடத்தும், தேசிய வர்த்தக பேச்சுவார்த்தைக் குழுவும் இந்த அமைப்பில் ஒருங்கிணைக்கப்படும்.

மேலும், 2023 வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய, இந்த சர்வதேச வர்த்தக அலுவலகம், முதலில் நிதி அமைச்சின் கீழ் நிறுவப்படும். பின்னர் அது வெளிவிவகார அமைச்சுடன் ஒருங்கிணைக்கப்படும். சர்வதேச வர்த்தகத்துக்கென பிரத்தியேகமான அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் வரை, அதன் பிரதான உத்தியோகத்தர்களின் தேவையை நிறைவு செய்வதற்காக அதன் பணிகள் ஜனாதிபதி செயலகத்தில் முன்னெடுக்கப்படும்.

அதற்கமைய, 2018 மே மாதம் முதல் அமுலுக்கு வரவேண்டி இருந்தபோதும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ள இலங்கை-சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே சர்வதேச வர்த்தக அலுவலகத்தின் முதல் பணியாகும்.

இலங்கை-சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரு நாடுகளாலும் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த குழு 2023 ஜனவரியில் கூடி ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வழிமுறைகள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும்.

இதனுடன் இணைந்ததாக அடுத்த ஜனவரி மாதமளவில் இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு , சர்வதேச வர்த்தக அலுவலகம் நடவடிக்கை எடுக்கும். இந்த நோக்கத்திற்காக, பிரதான பேச்சுவார்த்தையாளர் ஒருவரும் விசேட துறைகள் தொடர்பான உப குழுக்களைக் கொண்ட தேசிய வர்த்தக பேச்சுவார்த்தைக் குழு (NTNC) ஒன்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளன.

இதனுடன் இணைந்ததாக, இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவுடனான 12வது சுற்று பேச்சு வார்த்தையும், சீனாவுடன் 7வது சுற்று பேச்சுவார்த்தையும், தாய்லாந்துடன் 3வது சுற்று பேச்சுவார்த்தையும் 2023 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ளது. அடுத்த வருடத்திற்குள் இந்தப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் நிலைமை குறித்து தெளிவுபடுத்துவதற்காக ஒவ்வொரு பேச்சுவார்த்தைகளின் ஆரம்பத்திலோ அல்லது நிறைவிலோ வர்த்தக பிரவேசத்தின் இறுதிப் பயனாளிகளான வர்த்தக சபைகள்/சங்கங்களுடன் சம்பந்தப்பட்ட தரப்பினரை தெளிவுபடுத்தும் நிகழ்வுகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே முதலாவது தரப்பினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 2022 நவம்பர் 17 ஆம் திகதி நடத்தப்பட்டது. மேற்கூறிய செயல்பாடுகளுக்கு இணைந்ததாக, இந்த அலுவலகத்தின் மூலம் பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியாவுடனான முன்னுரிமை வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.வெளிவிவகார அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய வேறு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, சர்வதேச
வர்த்தக அலுவலகம் தற்போதுள்ள வர்த்தக ஒப்பந்தங்களை செயல்படுத்துவது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...