வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியுள்ளது.
புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டதையடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியதிகாரத்தை இழந்துள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரு தடவைகள் தோல்வியடைந்தன.
இதனையடுத்து, புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான தேர்தல் வவுனியா வடக்கு பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் இன்று (22) முற்பகல் இடம்பெற்றது.
இதன்போது, சபையின் 26 உறுப்பினர்களில் 25 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் பிரசன்னமாகவில்லை என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
இதன்போது, தமிழ் கூட்டமைப்பு சார்பில் சோ.சத்தியேந்திரனும் சுதந்திரக் கட்சியின் த.பார்தீபனும் தலைவர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
இதன்போது, இருவரும் தலா 12 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தமையால், திருவுளச்சீட்டு மூலம் தவிசாளர் தெரிவு இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
திருவுளச்சீட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினை சேர்ந்த த.பார்தீபன் , வவுனியா வடக்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.