இலங்கையில் உடல் முழுவதும் நீல நிறத்துடன் குழந்தை ஒன்று மதவாச்சி அரச வைத்தியசாலையில் பிறந்துள்ளது.
Congenital Methemoglobinemia என அழைக்கப்படும் நோய்க்கு ஆளாகியுள்ள இந்த சிசு விசேட பரிசோதனைக்கும் சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக இந்த வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவின் வைத்திய நிபுணர் ரணவக தெரிவித்துள்ளார்.
நாட்டில் நோயறிதல் வசதிகள் இல்லாததால், குழந்தையின் இரத்தம் ஜேர்மனிக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது குழந்தை அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அதிர்ஷ்டவசமாக, இந்த நோய்க்கான மருந்துப் பொருட்கள் இலங்கையில் கையிருப்பில் இருந்ததால் சிசுவின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
முழு உடம்பும் நீள நிறமாக மாறுதல், சுவாசிக்க சிரமப்படுதல், தசை நார்கள் வளர்ச்சியடையாமை ஆகியன இந்நோய்க்கான அறிகுறிகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் பெரும்பாலும் இரத்த உறவு திருமணங்களுடன் தொடர்புடையது, ஆனால் இந்த சிசுவின் பெற்றோர்கள் இருவரும் ஒரே
இரத்த உறவுகள் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ரணவக தெரிவித்துள்ளார்.
உலகளவில், இந்த நிலை ஒவ்வொரு 100,000 குழந்தைகளில் தோராயமாக ஒருவருக்கு ஏற்படும் நிகழ்வு விகிதத்தைக் கொண்டுள்ளது. இவ்வாறான சிசு ஒன்று இலங்கையில் பிறந்தது இதுவே முதல் தடவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.