“அமரர் கலாநிதி மன்மோகன் சிங், இந்தியாவின் பிரதமராக இருந்த காலத்தில், “13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதிலிருந்து கட்டியெழுப்பி அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறை ஏற்படுத்தப்படும்” என்ற வாக்குறுதியை இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து பெற்றிருந்தார்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“முன்னாள் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் (வயது 92) மறைவுக்கு எமது மனப்பூர்வமான அஞ்சலிகள். அவர் இந்தியாவின் பிரதமராக இருந்த காலத்தில் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்திருந்தார். 2011 இல் அப்போதைய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான கூட்டறிக்கையில் “13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதிலிருந்து கட்டியெழுப்பி அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறை ஏற்படுத்தப்படும்” என்ற வாக்குறுதியைப் பெற்றவர்.
அவர் பிரதமராக இல்லாத சமயத்திலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கச் சென்றபோது நாம் அவரை, அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி கூறி உரையாடியிருந்தோம். இந்தியாவின் பொருளாதார எழுச்சிக்குக் காரணகர்த்தாவாக இருந்த அன்னாரின் மறைவுக்கு மீண்டும் எமது மனப்பூர்வமான அஞ்சலிகள்!!” – என்றுள்ளது.