அனைவரும் ‘வரிக் கோப்பு’ திறப்பது கட்டாயம்

0
164

புதிய வாகனப் பதிவு, புதிய வருமான உரிமம், புதிய நடப்புக் கணக்கு திறப்பு மற்றும் சொத்துக் கொள்வனவுகளை மேற்கொள்ள வரிக் கோப்புகளைத் திறப்பதற்கான முடிவை ஜனவரி முதலாம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பெரும்பாலான மக்கள் இதுவரை வரிக் கோப்புகளை திறக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த மக்கள் தங்கள் வரிக் கோப்புகளைத் திறக்க ஒரு மாதகால அவகாசம் வழங்க நிதி அமைச்சு முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

இந்தப் பதிவு கடினமான விடயம் அல்ல. உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் யார் வேண்டுமானாலும் உள்நுழைந்து ஒன்லைன் முறை மூலம் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். கணக்கைத் தொடங்க நபரின் தேசிய அடையாள அட்டை (NIC) மட்டுமே போதுமானது என்றும் அவர் கூறினார்.

பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நபரும் வரி செலுத்த வேண்டும் என்பதல்ல இதன் நோக்கம். யாரேனும் ஒருவர் தனது மாத வருமானம் ரூ.100,000 ஐ தாண்டவில்லை என்றால், அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வரிக் கோப்பைத் திறந்து பதிவு செய்வது ஒரு நபருக்கு மிகவும் மதிப்புமிக்கது. ஜனவரி மாதத்தின் பின்னர், புதிய வாகனங்களை கொள்வனவு செய்யும் போதும், புதிய வருமான அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதிலும், நடப்புக் கணக்கு ஆரம்பிக்கும் போதும், சொத்துக்களை கொள்வனவு செய்யும் போதும் வரிக் கோப்பு இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here