ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மீதான நம்பிக்கை நாட்டிற்குள்ளும் சர்வதேச அளவிலும் உடைக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெறாமல் ஒரு நாட்டை ஆட்சி செய்ய முடியாது என ஜே.வி.பி தலைவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த தருணத்தில் நாட்டுக்கு நம்பகமான மற்றும் நிலையான ஆட்சி தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாமல் எந்தவொரு நாடும் இலங்கைக்கு ஆதரவை வழங்காது எனவும், எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட இறக்குமதி நடவடிக்கைகளுக்கு நாட்டின் மீதான நம்பிக்கை வீழ்ச்சியே காரணம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அந்த ஆட்சியில் நாட்டின் நெருக்கடிகளை தீர்க்க 05 அத்தியாவசிய விடயங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என ஜே.வி.பி தலைவர் கூறுகிறார்.
வெளிநாட்டுக் கடனைப் பெறுதல், கடனைப் பின்னர் செலுத்துதல், வெளிநாட்டவர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் இருந்து பணம் சம்பாதித்தல், சுற்றுலா மூலம் பணம் சம்பாதித்தல், நுகர்வு முறைகளில் மாற்றம் என்பன இந்த ஐந்து விடயங்களாகும் என அனுர திஸாநாயக்க இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.