மல்வானையில் பாரிய அதிசொகுசு வீடொன்றை நிர்மாணித்தமை தொடர்பில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பசில் ராஜபக்ச மற்றும் திருகுமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (07) கம்பஹா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கின் பிரதான அரசாங்க சாட்சியான, வீட்டை நிர்மாணித்த கட்டட நிபுணரான முதித்த ஜெயக்கொடியிடம் இன்று குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
எஃப்.சி.ஐ.டி மற்றும் நீதிமன்றத்தின் முன்பு தான் கூறிய அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது என்று அவர் முன்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட திருகுமார் நடேசன் சார்பில் இன்று ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், முதித்த ஜெயக்கொடியிடம் குறுக்கு விசாரணை செய்ததுடன், அவர் செலுத்திய வருமான வரியை மீட்பதற்காக விண்ணப்பித்த ஆவணங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதன்படி சட்டமா அதிபர் திணைக்களம் முதித்த ஜயக்கொடியை அரசாங்க சாட்சியாக பயன்படுத்தியமையினால் வழக்கு வீழ்ச்சியடையும் தருவாயில் உள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடுத்த விசாரணைக்கு அழைக்காமலேயே விடுவிக்கும் போக்கு காணப்படுவதாகவும், அது ஜனவரி 21ஆம் திகதி நடைபெற வாய்ப்புள்ளதாகவும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.