தற்போதைய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போது இரண்டு வாரங்களுக்கு மாத்திரமே தற்காலிக அமைச்சரவையாக இருக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்குக் காரணம், சர்வகட்சி அரசாங்கத்தை அல்லது பல கட்சிகளின் பங்களிப்புடன் அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி தீர்மானித்திருந்தார்.
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்கத் தவறிய நிலையில், எதிர்க்கட்சியின் ஒரு குழுவை இணைத்து பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி முயற்சித்தார், ஆனால் இதுவரை இந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
இதன்படி தற்காலிகமாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட அமைச்சரவையை தொடர்ந்தும் பராமரிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அந்த முடிவின் அடிப்படையில் ஒரு எதிர்க்கட்சி குழுவை அரசு பக்கம் காப்பாற்ற ஜனாதிபதி முயற்சிக்கிறார்.
இதேவேளை, பொதுஜன பெரமுன அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு, மற்றுமொரு குழுவிற்கு அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளை வழங்குமாறு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்தது. இல்லாவிட்டால் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பது குறித்து இருமுறை யோசிக்க வேண்டியிருக்கும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழு தெரிவித்துள்ளது.
இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதுடன், அதற்கு முன்னதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவிற்கு இராஜாங்க அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்தார். எனினும், அதற்கான சத்தியப்பிரமாணம் இதுவரை இடம்பெற்றதாகக் காணப்படவில்லை.