தற்போது கரையோரப் புகையிரதப் பாதையின் பராமரிப்புப் பணிகளில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக ரயில் தடம் புரளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக புகையிரத பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, விலைமனு திறப்பதில் ரயில்வே திணைக்களம் சிரமப்படுவதாகவும், அடுத்த ஏப்ரலில் பராமரிப்புப் பணிகளுக்கு புதிய விலைமனு கிடைக்கும் என்றும் செனவிரத்ன கூறினார்.
எவ்வாறாயினும், தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, புகையிரத பொது முகாமையாளர் இன்று கொழும்பு கோட்டையிலிருந்து வாதுவ வரை அவதானிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ரயில் பாதை பராமரிப்புக்கு ஆள்கள் மற்றும் மூலப்பொருட்கள் வழங்குவதில் சிக்கல் இருப்பதாகவும், எதிர்காலத்தில் விபத்துக்கள் ஏற்படக் கூடும் எனவும், அதனைத் தடுப்பதற்கான தற்காலிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்சமயம் மாற்று வழி இல்லாததாலும், அந்த நிலை காரணமாக ரயில்களின் தாமதத்தை தடுக்க முடியாததாலும் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுக்கும் வகையில் மணிக்கு 20 கிலோமீற்றர் வேகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.