தலவாக்கலை – பூண்டுலோயா வீதி ஹொலிரூட் பகுதியில் நேற்று (25) மாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வீதியில் பெரிய மண்மேடு சரிந்து விழுந்தது, இதனால் அந்த வீதியில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.
இதன்காரணமாக தலவாக்கலை – பூண்டுலோயா வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் அதற்கு பதிலாக வேறு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த மண்சரிவு ஏற்பட்ட இடத்தின் கீழ் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
தலவாக்கலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் பல வீதிகளில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதுடன், அந்த வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.