முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் காலங்களில் கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிறு குண்டுவெடிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக அவரைக் கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்த போதிலும், அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியமையால் கர்தினால் உட்பட பல தரப்பிலிருந்து கடுமையான அழுத்தங்கள் கிளம்பின.
இவ்வாறானதொரு பின்னணியில் அண்மைக்காலமாக மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை இடைவிடாது தாக்கத் தொடங்கியுள்ள நிலையில், அவரைப் பாதுகாக்கக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் கருத்தை வெளியிட்டுள்ளது.
அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மைத்திரிபால சிறிசேனவும் தாம் எதற்கும் தயார் என தனது நெருங்கிய சகாக்களிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.