சமூக ஆர்வலர்களுக்கு எதிராக பொலிஸாரினால் நடத்தப்பட்ட வன்முறையின் மூலம் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாட்டின் பழமையான தொழிற்சங்கம் ஒன்று வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகளை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, பெரும்பான்மையான தனியார் துறை ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வர்த்தக, கைத்தொழில் மற்றும் பொது ஊழியர் சங்கம் (CMU) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு மாணவர் தலைவர்களை விடுவிக்கக் கோரி சமூக ஆர்வலர்களான நிரோஷா டேனியல் மற்றும் பிரியந்தி பெர்னாண்டோ ஆகியோர் கடந்த 13ஆம் திகதி களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி மேற்கொண்ட பாதயாத்திரையை களுத்துறை மற்றும் பாணந்துறையில் பொலிஸார் தடுக்கப்பட்டமை அரசியல் அமைப்பு வழங்கிய பேச்சு சுதந்திரத்தை மீறும் செயலாகும் என தொழிற்சங்கத்தின் பதில் பொதுச் செயலாளர் செல்லையா பழனிநாதனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமைகள் மீறப்பட்ட இரண்டு சமூக ஆர்வலர்களுக்கும் பொலிஸாரால் நியாயமான நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என அவர் ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், உயர் பொலிஸ் அதிகாரிகளால் கண்டிக்கப்பட்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நட்டஈடு வழங்குமாறும், பெண்களை துன்புறுத்தும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை தடுக்கும் ஒழுங்குமுறைகளை கொண்டு வருமாறும் அக்கடிதத்தில் இலங்கை வர்த்தக, கைத்தொழில் மற்றும் பொது ஊழியர் சங்கம் கோரியுள்ளது.
N.S