பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றி தெளிவுபடுத்தும் நிகழ்வு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் ஹம்பாந்தோட்டை மாவட்ட ஹுங்கம விஜயபா கல்லூரியில் நேற்றுமுன்தினம்(09) இடம்பெற்றது.
பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் மாணவர்களின் அறிவை வளர்த்தல் இந்த நிகழ்வின் பிரதான குறிக்கோளாக அமைந்ததுடன், அதற்காக பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க மற்றும் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எச். ஈ. ஜனகாந்த சில்வா ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
ஹுங்கம விஜயபா கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் அப்பாடசாலை மாணவர் பாராளுமன்ற அங்கத்தவர்களும், மாணவ தலைவர்களும், அழைக்கப்பட்ட 5 பாடசாலைகளின் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது பாராளுமன்ற பிரதி சபாநாயகரின் பணிகள் தொடர்பில் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ உரையாற்றியதுடன், அதன்போது அவர் குறிப்பிடுகையில், பாராளுமன்றத்தினால் பாரிய ஒரு பணி மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், ஊடகங்கள் அதனை உரிய முறையில் பிரஜைகளுக்கு தொடர்பாடல் செய்வதில்லை எனக் குறிப்பிட்டார். இதனால் பாராளுமன்றம் தொடர்பில் மக்களின் மனப்பாங்கு நல்லதாக இல்லை எனத்தெரிவித்தார். அதனால் பாராளுமன்றத்தினால் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பில் சரியான முறையில் மக்களுக்கு கொண்டுசெல்லும் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
அதேபோன்று, ‘எமது பாராளுமன்றம் மற்றும் எதிர்கால பிரஜைகளின் பங்களிப்பு’ எனும் தலைப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க உரையாற்றியதுடன், ‘பாராளுமன்றத்தின் பணிகள் மற்றும் சட்டவாக்க செயன்முறைகள்’ எனும் தலைப்பில் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எச்.ஈ. ஜனகாந்த உரையாற்றினார்.
இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த நிகவுகளின் ஒரு அங்கமாக இந்த விசேட தெளிவுபடுத்தும் நிகழ்வு அமைந்தது.
N.S