போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தப்பிச் செல்ல முயன்ற போது பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையில் பணிபுரிந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
ஹெரோயின் கடத்தல் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த சந்தேகநபர் நேற்று (11) பிற்பகல் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து சுமார் 15 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மருதானை பிரதேசத்தில் உள்ள ஒருவரிடமிருந்து இந்த போதைப்பொருள் பெறப்பட்டதாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
பின்னர், சந்தேகநபரை மருதானை பகுதிக்கு அழைத்து வந்த போது, தாமரை கோபுரம் அருகில் தண்ணீர் குடிக்க விரும்புவதாகக் கூறி, அங்கு வழங்கப்பட்ட கண்ணாடிப் போத்தலை உடைத்து, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
அப்போது அவர் உயிரிழந்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பொடி லேசி என்ற போதைப்பொருள் வியாபாரியின் நெருங்கிய உறவினர் என பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.