தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் உரிய திகதியில் கிடைத்தால், குறித்த காலப்பகுதிக்குள் விநியோகிக்க முடியும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தபால் மா அதிபர் ருவன் சரத் குமார தெரிவித்துள்ளார்.
புதிய தபால் மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சரத் குமார, 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பை நடத்துவதற்கு தபால் திணைக்களம் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
உள்ளாட்சித் தேர்தல் மார்ச் 09ஆம் திகதி நடைபெறுவதாக இருந்தபோதும், பணப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திட்டமிட்ட திகதியில் தேர்தல் நடத்தப்படாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஏப்ரல் 25ஆம் திகதி ‘மிகப் பொருத்தமான’ நாளாகக் கருதுவதாக ஆணைக்குழு அண்மையில் அறிவித்தது.
தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல்கள் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்தார்.
இதனால், தபால் வாக்குச் சீட்டுகள் அடங்கிய முன்பதிவு செய்யப்பட்ட பொதிகள் தபால் திணைக்களத்திற்கு மார்ச் 21ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
N.S