‘பண்டோரா பேப்பர்ஸ்’ தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்காக சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவின் கோரிக்கைக்கு அமையவே இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டத்தரணியூடாக சத்தியக்கடதாசி மூலம் வாக்குமூலம் வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
‘பண்டோரா பேப்பர்ஸ்’ தொடர்பிலான விசாரணைகளுக்காக நிருபமா ராஜபக்ஸ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோரிடம் மாத்திரமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளுக்காக உள்நாட்டு வணிக வங்கிகள், அரச வங்கிகள் மற்றும் வரி வருமான திணைக்களத்திடம் ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.
சர்வதேச அரசியல் தலைவர்கள் மற்றும் கோடீஸ்வரர்களின் இரகசிய கொடுக்கல், வாங்கல் அடங்கிய பட்டியலில் இலங்கையின் முன்னாள் அமைச்சரான நிருபமா ராஜபக்ஸ மற்றும் அவரது கணவரான வர்த்தகர் திருக்குமார் நடேசன் ஆகியோரது பெயர்களும் வௌியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.