நாம் செல்கின்ற சுற்றுலாத்தளங்களிலே சிறு கொட்டகைகளில் பல்வேறு பொருட்களை வைத்துக்கொண்டு கூவி கூவி தங்கள் பொருட்களை விற்பனை செய்துவரும் ஒரு சிறு வியாபார கூட்டத்தை எல்லோரும் கடந்து சென்றிருப்பீர்கள்.
இவர்களின் ஒரு நேர உணவுக்காக இவர்கள் சிந்தும் வியர்வைத்துளிகள் அதிகமாகவே இருக்கும். யுத்தம், கொவிட் தொற்று, பொருளாதார நெருக்கடி நிலைமைகளில் இவர்களின் வாழ்க்கையின் வலி நிறைந்த பக்கங்களும், இவர்கள் எந்த இனத்தினராக இருந்தாலும் ஏனைய இனத்தவர்களுடனான அவர்களின் சமாதான பன்மைத்துவமும் சற்றே வித்தியாசமானது.
தெற்காசிய நாடுகளில் சுற்றுலாத்துறைக்கு பெயர் பெற்ற நாடுகளில் இலங்கை முக்கிய இடத்தினை வகிக்கின்றது. நாட்டின் மொத்த அந்நிய செலாவணி வரவில் 13 முதல் 15 சதவிகிதம் வரையிலான பங்களிப்பை சுற்றுலாத்துறை வழங்கிவரும் நிலையில், தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாகவும் இலங்கையின் தலைநகர் உட்பட பல்வேறு பகுதிகளிலே இடம்பெறுகின்ற போராட்டங்களினாலும் சுற்றுலாத்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் சுற்றுலாத்தளங்களில் சிறு தொழிலினை மேற்கொள்ளும் வியாபாரிகள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
கதிர்காம ஆலயம்
இலங்கையில் இந்துக்களும் பௌத்தர்களும் ஒரே வரிசையில் நின்று இறைவனை வணங்கும் ஒரே இடம் எதுவென்றால், நாம் முதலில் கதிர்காமம் முருகன் ஆலயத்தைச் சொல்லிவிடலாம்.
மொனராகலை மாவட்டத்திலுள்ள கதிர்காமம் முருகன் ஆலயம் பழம்பெரும் காலத்திலிருந்தே சிங்கள மற்றும் தமிழர்களுக்கிடையில் அழிக்க முடியாத பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு காலத்தில் வட இலங்கையை ஆண்டுவந்த எல்லாளனுடன் போர் புரியச் செல்லும் முன், சிங்கள மன்னன் துட்டகைமுனு கதிர்காமத்துக்கு வந்து முருகனை வணங்கி, அதன் பின் அந்தப் போரில் வெற்றி அடைந்தான் என்று சிங்களவர்களின் சரித்திரக் கதைகள் கூறுகின்றன.
இத்தகைய பெருமைமிகு தலமான கதிர்காமக் கந்தன் ஆலய சூழலில் பல்லின சமூகத்தினரும் சிறு வியாபார நிலையங்களை நடத்தி வருவதை தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார்கள். தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என மூவினத்தவர்களும் இன, மத பேதமின்றி பன்மைத்துவத்துடன் வாழும் அப்பகுதி, வரலாற்று மூலாதாரமாகவும், சுற்றுலாத்துறைக்கு பெயர்போன இடமாகவும் விளங்குகின்றது. எனினும், சமகால பொருளாதார நெருக்கடி அவர்களையும் விட்டுவைக்கவில்லை.
‘தொதல் செய்வதற்கான உள்ளீடுகளின் விலையேற்றம் காரணமாக 500 ரூபாயாக இருந்த தொதல் 900 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இதனால், தற்போது எங்களது வியாபாரம் சரி பாதியாக குறைவடைந்துள்ளது” என்கிறார் தனது மகள், மகன், மனைவியுடன் அப்பகுதியில் தொதல் வியாபாரத்தில் ஈடுபடும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவரான திலான்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலும் தனது 18 வயதுடைய மாற்றுத்திறனாளியான மகன் மற்றும் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மகள் ஆகியோர் அவரது குடும்பத்தில் இருக்கிறார்கள்.
கதிர்காமம் என்றால் முருகன் எவ்வளவு பிரசித்தமோ, அதுபோல் கறுப்பு (களு) தொதலும் மிகவும் பிரசித்தமானது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த தொதலை வாங்காமல் செல்வது அரிதாகும். இந்த தொதல் வியாபாரத்தை 15 வருடங்களாக மேற்கொண்டு வரும் திலான், தற்போது இந்த வியாபாரம் உட்பட சுற்றுலாவை மையப்படுத்திய ஏனைய பல வியாபாரங்களும் மந்த நிலையிலேயே உள்ளது என திலான் கூறுகிறார்.
தேங்காய்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதனாலும், தற்போது தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள நோய் காரணமாகவும் உள்ளூரில் தேங்காய்களை பெற்றுக்கொள்வது கடினமாக உள்ளது. அத்துடன், தேங்காயை மூலப்பொருளாக கொண்டு உணவு உற்பத்தியில் ஈடுபடும் ஏனைய சிறு வியாபாரிகளின் நிலையும் என நிலை போலவே அபாயகரமாக மாறிவருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது வாழ்வாதாரமாக இவ்வாறான தொழில்களை நம்பி வாழும் சிறு வியாபாரிகளின் வாழ்க்கை கேள்விக்குள்ளாகியிருப்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
உள்நாட்டு யுத்தமும், சுற்றுலாத்தளமும்
கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்த காலத்திலே இன, மத பன்மைத்துவம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தது.
கண்டி, தலதா மாளிகையில் 25ஆம் திகதி ஜனவரி மாதம் 1998ஆம் ஆண்டு இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலும், அதன் பின்னரான பல்வேறு இடங்களின் மீதான தாக்குதலும் சுற்றுலாத்துறையை பெருமளவில் பாதித்திருந்தது.
இதன் காரணமாக தமிழ் மற்றும் சிங்கள இனங்களுக்கிடையில் விரோதமான போக்கே காணப்பட்டது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி உள்நாட்டு யுத்தம் முற்றுப்பெற்ற பின்னரான காலப்பகுதியில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் வடக்கு மற்றும் தெற்கை நோக்கி சுற்றுலாக்களை மேற்கொண்டிருந்ததுடன், அரசினால் இரு இனங்களுக்கு இடையிலான சமாதான நல்லினக்க செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான சமாதான நல்லிணக்க செயற்பாடு காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்திருந்தது.
மேலும், இத்தகைய நடவடிக்கையின் ஊடாக இனங்களுக்கிடையிலான மொழி, கலாசாரம், பண்பாடுகள் மற்றும் தங்களின் வாழ்வியலை ஒருவருக்கு ஒருவர் அறிந்துகொள்வதுடன், சமாதான பன்மைத்துவத்தினை ஏற்படுத்துவதற்கு ஏதுவானதாக இந்த சுற்றுலாத்தளங்கள் மாறின. இதனால் முக்கிய சுற்றுலாப் பகுதிகளில் குறிப்பிட்ட இனத்தவர்கள் மட்டுமே வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலைமை மாறியதுடன், ஏனைய இனத்தவர்களும் தங்களின் சிறிய மற்றும் நடுத்தர வியாபார நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வாய்ப்பாகவும் அமைந்தது.
இப்போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் தலதா மாளிகை போன்ற பகுதிகளில் வியாபாரங்களில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது.
எனினும், பல்லின சமூகத்தினரும் வாழும் இடமாக திருகோணமலை மாவட்டத்தில் இந்த நிலை சற்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இங்கே பல சுற்றுலாத்தளங்கள் காணப்பட்டாலும் கூட, கன்னியா வெந்நீரூற்று பகுதி சமய, சமூக வரலாற்று ரீதியாக மிகவும் முக்கியமான இடமாக காணப்படுகிறது.
இந்த சுற்றுலாத்தளத்தினை சூழ 96 சிங்களவர்கள், 4 தமிழர்கள், 2 முஸ்லிம் இனத்தவர்கள் என 102 பேர் சிறு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்து தமிழர்களின் வரலாற்று ஆலயமாகவும், பகுதியாகவும் அடையாளம் கொண்டுள்ள கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருக்கோணேச்சரம் தொடர்பாக அண்மைக் காலங்களில் ஏற்பட்ட சர்ச்சை மற்றும் நிலவுரிமைப் போராட்டங்கள் இங்கு வாழக்கூடிய சிங்கள – தமிழ் மக்களின் நல்லுறவில் சற்று விரிசலை ஏற்படுத்தியுள்ளமை கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் கன்னியா வெந்நீரூற்றில் சிறு வியாபாரத்தினை மேற்கொள்ளும் ராஜேந்திரம் ரஞ்சினி,
இராணுவத்தினால் சுடப்பட்டு எனது கணவர் இறந்ததுடன், மகனையும் பறிகொடுத்த நிலையில் எனது மகளுடன் வாழ்ந்து வருகின்றேன். கொவிட் பெருந்தொற்று காலத்தில் உண்ணுவதற்கே வழியில்லாத நிலையும் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் 5000 தொடக்கம் 6000 வரை நாளாந்த வருமானத்தினை பெற்றபோதும், தற்போது 500 தொடக்கம் 1000 வரையே கிடைக்கிறது. சில நாட்களில் எதுவித வருமானமும் பெறாமல் வெறும் கையுடன் திரும்பிச் சென்றுள்ளேன். எனது மருத்துவ செலவுக்கே பல ஆயிரம் ரூபாய் பணம் தேவை. தற்போதைய நிலையில் அதற்கும் வழியில்லாமல் உள்ளது என்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் வியாபாரம் செய்துவரும் அவர் கவலையோடு தெரிவித்துள்ளார்.
இங்கு எம்முடன் சிங்களம் மற்றும் முஸ்லிம் நண்பர்களும் இவ்வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதுடன், வியாபார நடவடிக்கையின்போது வாடிக்கையாளருடன் கதைப்பதற்கு மொழி தடையாக இருக்கும்போது எமக்கு இவர்கள் உதவுகின்றனர். அதேபோல் நாமும் அவர்களுக்கு உதவுகின்றோம் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
சுற்றுலாத்துறையும், பன்மைத்துவ சமூக வியாபார நடவடிக்கையும் படிப்படியாக வளர்ச்சி பெற்றதுடன், இலங்கை வரலாற்றிலேயே சுற்றுலாத்துறை மூலம் அதிகளவிலான வருமானம் கிடைத்த ஆண்டாக 2018ஆம் ஆண்டு பதிவாகியிருந்தது. இந்த ஆண்டில் மாத்திரம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 796 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததுடன், 4,380.6 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்திருந்ததாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளர்ச்சி நிலையானது 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதலின் காரணமாக ஒரு வருடத்தில் சுற்றுலாத்துறையின் வருமானம் 3.6 பில்லியன் டொலர்களாக குறைந்தது. இவ்வாறு முடங்கிய சுற்றுலாத்துறையானது ஆறு மாதங்களுக்கு பிறகுதான் படிப்படியாக மீளத்தொடங்கியது.
ஈஸ்டர் தாக்குதலினால் சேதமாக்கப்பட்ட கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்
மீள்வளர்ச்சி படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில் கொரோனா பொது முடக்கம் காரணமாக மீண்டும் இலங்கை சுற்றுலாத்துறை மாத்திரம் இல்லாமல் முழு உலக சுற்றுலா நடவடிக்கையும் முடங்கியது. இதன் காரணமாக 2020ஆம் ஆண்டில் 8 மாதங்கள் சர்வதேச விமான சேவை முடக்கப்பட்டதுடன், அந்த ஆண்டு வெறும் 5 லட்சம் பேர் மட்டுமே இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மற்றும் ஏனைய வருகையை மேற்கொண்டார்கள்.
இது இவ்வாறிருக்க, 2020ஐ விட 2021ஆம் ஆண்டில் நிலைமை இன்னும் மோசமானது. கொரோனா அச்சம் காரணமாக இரண்டு இலட்சத்துக்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளே இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார்கள்.
கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டு நாட்டின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை மெல்ல மெல்ல நிமிர ஆரம்பித்தபோது, 2022ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் இலங்கையின் அனைத்து துறைகளும் மிக வேகமாக மீண்டும் வீழ்ச்சி அடைந்தன. இதன் காரணமாக இத்துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வரும் ஹோட்டல் துறையினர், வாகன ஓட்டுநர்கள், பயண வழிகாட்டிகள், பயண ஏற்பாட்டாளர்கள், சுற்றுலாத்தளங்களிலே சிறு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் என 30 இலட்சம் பேர் வரை பாதிப்படைந்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியின்போதான முடக்கத்தில் வவுனியா
“கணவரால் கைவிடப்பட்ட நிலையில் மட்டக்களப்பு பாசிக்குடாவில் சிறு வியாபாரத்தினை மேற்கொண்டு வருகின்றேன். கொவிட் பெருந்தொற்று காலத்தில் வெற்றிலை மற்றும் சர்பத் விற்பனையை வீட்டில் வைத்து செய்ததுடன் ஒரு நாளைக்கு 1000 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்ட முடிந்தது. சில நேரங்களில் அதுவும் இல்லை. எனது தொழிலினை ஆரம்பிக்கும் காலத்தில் ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பவத்தால் எனது வியாபாரம் பெரும் பாதிப்புக்குள்ளானது. மேலும், அக்காலப்பகுதியில் முஸ்லிம்களை பார்க்கும்போது ஒருவித அச்சநிலை காணப்பட்டது” என சமாதானப் பன்மைத்துவம் கேள்விக்குள்ளான விடயத்துடன், சமகால பொருளாதார நெருக்கடியின் தாக்கம் குறித்தும் மட்டக்களப்பைச் சேர்ந்த செ.சந்திரவதனி கூறியுள்ளார்.
இந்நிலையில் தமது கிராம சேவகர் பிரிவில் சமய நல்லிணக்கம் தொடர்பாக பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன் ஊடாக தனது அச்ச உணர்வு நீங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“தற்போதைய பொருளாதார நெருக்கடியில் முன்பு போல் பெரிய அளவில் சுற்றுலாப்பயணிகள் வருவது குறைவாக உள்ளது. அவ்வாறு வருவது என்றாலும், நேரடியாக இங்குள்ள ஹோட்டல்களில் பதிவு செய்து அங்கு செல்வதுடன், அவர்களின் வாகனங்களின் மூலமாகவே சுற்றுலாத்தளங்களுக்கு சென்று வருவதால் எங்களது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட விலைவாசி உயர்வுகளினால் இவ்வாறு சிறு வியாபாரம் செய்பவர்கள் தங்களின் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் எவ்வளவு வருமானம் ஈட்டினாலும் தற்போதைய விலைவாசியினால் எதுவுமே மிஞ்சுவதில்லை என்று பொலநறுவை கல் விகாரை அருகே மாலைகளை விற்பனை செய்துவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஜே.சதீபா எனும் பெண்மனி தெரிவித்துள்ளார்.
“பொலநறுவையை பொறுத்தவரையில் இங்கு சுற்றுலாப்பயணிகளுக்கான தங்குமிட வசதிகள் மிக அரிதாக இருப்பதால், எமது வியாபார நடவடிக்கை 6 மணி வரையே மட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும், கொரோனா காலத்தில் இளநீர், பப்பாளி மற்றும் தேங்காய் விற்பனைகளில் ஈடுபட்டே எங்களது வாழ்க்கையை கொண்டு செல்ல முடிந்தது. தற்போது எங்களது மாலைகளை வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் பாசிக்குடா, திருகோணமலை, வவுனியா போன்ற இடங்களில் இருந்து வரும் தமிழ், முஸ்லிம் சிறு வியாபாரிகளும் கொள்வனவு செய்கின்றனர். சில வேளைகளில் அதற்கான பாதிப் பணத்தினை வழங்கிவிட்டு பின்னர் பொருட்களை விற்றுவிட்டு மீதி பணத்தை தருவார்கள். சிலர் பொருட்களை விற்றுவிட்டு பணத்தை தருவார்கள்” என்றும் சதீபா சொல்கிறார்.
“தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை மிக குறைவாக உள்ளது. இதனால் எனது வியாபார நடவடிக்கைக்கும் புதிதாக பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் பணம் இல்லை. அத்தோடு 23 வருடங்களாக இத்தொழிலில் ஈடுபடுகிறேன், இதை விட்டுவிட்டு வேறு தொழில் செய்யவும் முடியாது. கூலி வேலைக்கு போவது என்றாலும் எனது முதுமை இடம் கொடுப்பதாக இல்லை” என 23 வருடங்களாக திருகோணமலை கன்னியா வெந்நீருற்றுப் பகுதியில் சிறு வியாபாரத்தில் ஈடுபடும் முஸ்லிம் இனத்தவரான ஐ.எம்.நஸார் தெரிவித்தார்.
இந்நிலையில் சிறு வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்கும் வழி குறித்து வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யோ.நந்தகோபனிடம் நாம் வினவியபோது,
“உற்பத்திக்கான மூலப்பொருட்கள் கிடைக்காமை, குறித்த பிரதேசங்களில் பெரிய வியாபாரிகளுடன் போட்டிபோட முடியாத நிலைமை, கல்வி அறிவு குறைந்தவர்களாக இருப்பதனால் சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான பொருட்கள் எது என்பதை தெரிவு செய்ய முடியாமை மற்றும் மொழி அறிவு போன்றவை காரணமாக சிறு வியாபாரிகள் பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இவ்வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு அரசாங்கத்தினால் தேவையான பயிற்சிகள், சுற்றுலாப்பயணிகளுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குரிய உதவிகள் மற்றும் சலுகைகளை வழங்குவதன் ஊடாக இவர்களின் வியாபாரத்தினை விஸ்தீரணப்படுத்த முடியும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“மூவின மக்களும் இணைந்து செயற்படும் சுற்றுலாத்தளங்களில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பதனால் இவர்களின் ஊடாக ஒரு சமாதான பன்மைத்துவம் உருவாகிறது. இனம், மதம் என்ற பாகுபாடின்றி சுற்றுலா என்ற விடயம் மக்களை ஒருங்கிணைத்துள்ளமை சிறப்பான விடயமாகும்.
நாங்கள் எதிர்பார்த்த அளவில் பெரிய மாற்றத்தை இத்துறை கொண்டுவராவிட்டாலும் கூட சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக சமாதான பன்மைத்துவத்துக்கான ஒரு சிறந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது” என்கிறார் வவுனியா பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. மதிவதனி சசிதரன்.
நாட்டில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியால் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள, அதனை நம்பி தொழில் முயற்சியில் ஈடுபடும் விளிம்புநிலை வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், பொருளாதார வறுமை பன்மைத்துவமாக மக்கள் ஒன்றுசேர்ந்து வாழும் நிலையையும் கேள்விக்குள்ளாக்கிவிடும் என்ற அச்சமும் எழாமலில்லை. இத்தகைய மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கத் தரப்பினரின் அணுகுமுறைகளையும் நாம் ஆராய நேர்ந்தது.
“சீன சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வரும் நோக்குடன், ஏப்ரல் மாதம் முதல் இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் வாராந்தம் 9 விமான சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது” என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த விடயம் குறித்து கருத்து கூறியிருக்கிறார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ
சீனாவின் சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு 3 வருடங்களின் பின்னர் இந்த வருடம் வருகை தருகின்றமை, இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு மிக முக்கியமான காரணமாக அமையும் என்றும் அவரால் கருத்து வெளியிடப்பட்டிருந்தது.
இலங்கையை பொருளாதார ரீதியில் விருத்தியடையச் செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ சபையினால் இலங்கைக்கு 2.276 பில்லியன் அமெரிக்க டொலரை 48 மாதங்களில் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
“பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவித் திட்டத்தைப் பார்க்கலாம்” என்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி பீட்டர் பவர் தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி பீட்டர் பவர்
“சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் இந்த நிதியானது விலையை ஸ்திரப்படுத்தல், அந்நிய செலாவணி இருப்பதை அதிகரித்தல், பண வீக்கத்தினால் குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை குறைத்துக்கொள்ளுதல், அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட இயலுமையை ஏற்படுத்திக்கொள்ள வழிவகுக்கும்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இது விளிம்பு நிலையில் உள்ள மக்கள் குழுமத்தினரின் எழுச்சிக்கு ஓரளவுக்கேனும் வழிகோலும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் இல்லாமலில்லை.
“நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை நீக்கும்பொருட்டு, எதிர்காலத்தில் நாட்டின் அந்நிய செலாவணியை அதிகரித்துக்கொள்வதுடன், அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் மற்றும் சுற்றுலாவுக்குத் தேவையான பொருட்கள் மீதான இறக்குமதித் தடைகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும். நாம் இந்த இடத்திலிருந்து எதிர்கால பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
பொருளாதார வீழ்ச்சியினால் முதலில் வீழும் துறையாக சுற்றுலாத்துறை இருப்பதுடன் இறுதியாக மீண்டெழும் துறையாகவும் இத்துறையே காணப்படுகிறது. முக்கிய சுற்றுலாத்தலங்களிலே மூவின மக்களும் இணைந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு வியாபார நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருக்கின்றது.
மேலும், ஏனைய காலங்களில் அவர்களின் வருமானம் கேள்விக்குறியாக இருப்பதன் ஊடாக அவர்களின் வியாபார நடவடிக்கை உரிய மாற்றத்துக்குள்ளாக வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
பொதுவாக, வியாபார நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த எண்ணுகிறார்களே ஒழிய, தங்களுடைய பொருளாதாரத்தை உரிய முறையில் கட்டமைக்க முடியாத ஒரு நிலைமையே இவ்வியாபாரிகளிடம் காணப்படுகிறது.
மேலும், இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் வேறு தெரிவுகளும் இல்லாதிருப்பது, இவர்களின் வியாபாரத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ளது.
இவ்வாறான பல சவால்களை சுற்றுலாத்துறையில் எதிர்கொள்ளும் சிறு வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைக்கு, மானிய முறையிலோ அல்லது குறைந்த வட்டியிலான கடனையோ அரசாங்கம் வழங்க வேண்டும். அத்துடன், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கான நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துதல், கல்விச் சுற்றுலாக்கள் போன்ற பல்வேறு சுற்றுலாக்களை ஊக்கப்படுத்துதலின் ஊடாக தமது வியாபாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியும் என்பது சுற்றுலாத்துறைசார் சிறு வியாபாரிகளின் எதிர்பார்ப்பாகும்.
மேலும், ஓர் இனமோ அல்லது சமூகத்தினரோ அல்லது வேறு இனமோ அல்லது சமூகமோ வாழும் இடங்களில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு பயணிப்பதன் ஊடாக அவர்களின் பண்பாடு, கலாசாரம் என்பன பரிமாறப்படுவதால், சிறந்த பன்மைத்துவமான சமூகத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்பதே நிதர்சனம்.
கட்டுரை – குமாரசிங்கம் கோகுலன்