புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மசோதாவிற்கு ஆதரவளிக்க வேண்டாம் என இலங்கையில் ஜனநாயகத்திற்கான குரல் என்ற அமைப்பு பிரதமர் உள்ளிட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த கோரிக்கையின் முழு வடிவம் வருமாறு,
பிரதமர், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களே!முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்ற வேண்டாம் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு முதலிடம் கொடுக்கவும்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மிகவும் புனிதமான கடமைகளில் ஒன்று, தங்கள் தொகுதி மக்களின் கருத்துக்கள் மற்றும் நலன்களை இதயத்தில் வைத்து புதிய சட்டங்களை உருவாக்குவதும், ஏற்கனவே உள்ள சட்டங்களை மாற்றுவதும் ஆகும்.
பாராளுமன்ற மசோதாக்களை கவனமாக ஆராய்வது, பொது நலனுக்கான கொள்கைகளை விவாதிப்பது, மற்றும் அரசாங்க முடிவுகளை மறுபரிசீலனை செய்வது ஆகியவை இந்த முக்கிய கடமையை நிறைவேற்றுவதில் இன்றியமையாத பங்கை வகிக்கின்றன.
பயங்கரவாதத் தடைச் சட்ட மசோதா எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அது மக்களின் வாழ்வுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஏற்படுத்தக்கூடிய நீண்டகால விளைவுகளை உணர்ந்தவர்களாக, உரிய கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த கால தவறுகளை சரிசெய்து இந்த சட்டமூலத்தை சரியாக உருவாக்குவது எமது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும்.
இம்மசோதாவில் காணும் பிரச்சினைக்குரிய விடயங்கள் எவை? பின்வருபவை உட்படப் பல உள்ளன:•
‘மோசமான சட்டத்தை’ மாற்றுவதாகக் கொண்டுவரப்படும் மசோதா, உண்மையில் தற்போதைய சட்டத்தை விட மிகவும் மோசமானது
• பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் தொடர்பாக ஐ.நா.வால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை இது பூர்த்தி செய்யவில்லை.
• மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் பரந்த அளவிலானவையும், தெளிவற்றதும், அகநிலை சார்ந்ததாகவும் இருப்பதால், சட்டத் துஷ்பிரயோகம் மற்றும் நீதி வழுவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன
• பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நீதித்துறை சாராத தடுப்புக்காவல்களைக் கோரலாம், அத்துடன் முறையான குற்றச்சாட்டுகள் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் கைதுகள் மேற்கொள்ளப்படும்.
• நீதித்துறை மேற்பார்வையின்றி நபர்கள் மற்றும் நிறுவனங்களை ஜனாதிபதி தடை செய்ய முடியும்
• அரசாங்கம் தனது அரசியல் எதிரிகள் என்று கருதுபவர்களையும் அமைப்புகளையும் முத்திரை குத்துவதற்கும், சட்டபூர்வமான நிலையை நீக்கம் செய்வதற்கும் சாத்தியம் உள்ளது; அரச நடவடிக்கைகளை மறுப்பவர்களும் எதிர்ப்பவர்களும் குறிப்பிடப்படாத காலத்திற்கு சிறையில் அடைக்கப்படலாம்
• தன்னிச்சையான கைது, தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகளைத் தடுப்பதற்கான விதிகள் இம்மசோதாவில் இல்லை என்பதுடன், உரிய நடைமுறை மற்றும் நியாயமான விசாரணைக்கு உத்தரவாதங்கள் இல்லை – இதனால், மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு அளித்த உறுதிமொழியை மீறுகிறது
• “நியாயமான காரணங்கள்” இருப்பதாக கருதினால், யாரையும் தடுத்து நிறுத்தவும், கேள்வி கேட்கவும், தேடவும், கைது செய்யவும், அல்லது எந்த ஆவணம் அல்லது பொருளையும் பிடியாணை இல்லாமல் பறிமுதல் செய்யவும், காவல்துறை மற்றும் இராணுவத்திற்கு இது மிகப்பரந்த அதிகாரங்களை வழங்குகிறது.
• ஒரு மோசமான சட்டத்தை நீக்க மிகமோசமான சட்டத்தைக் கொண்டு வருவது, ஜனாதிபதி கூறுவதுபோல் ஐரோப்பிய ஒன்றியம் (GSP+ கட்டணச் சலுகை) அல்லது பிற சர்வதேச நன்கொடையாளர்களிடமிருந்து எந்தப் பொருளாதாரப் பலன்களையும் பெற்றுத்தராது.
சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாது.பல தெளிவற்ற சட்டப்பிரிவுகளைக் கொண்ட இம்மசோதா பலவகையான துஷ்பிரயோகத்திற்கு இடமளிப்பதுடன், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நீண்டகால வேதனைக்குரிய விளைவுகளை ஏற்படுத்தும். இவையனைத்தையும் கருத்தில் கொண்டு, தற்போதைய வடிவத்திலுள்ள மசோதா ரத்து செய்யப்பட வேண்டும்.
அதிகாரத்தை வைத்திருக்கும் அரசியல்வாதிகள் என்ற வகையில், தார்மீக உறுதியுடனும் நேர்மையுடனும் சரியானதைச் செய்யுமாறு நாம் உங்களை கேட்டுக்கொள்கிறோம். பொது நலம், அரசியல் நேர்மை, மற்றும் ‘சட்டத்தின் ஆட்சி மட்டில் மரியாதை’ என்பன தன்னலத்தை வெற்றி பெறும் ஒரு தருணம் இதுவென நாம் நம்புகிறோம்.
தயவுசெய்து முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு தைரியத்துடனும் திடநம்பிக்கையுடனும் ‘இல்லை’ என்று வாக்களிக்கவும். அவ்வாறு செய்யத் தவறுவதென்பது சமூக, அரசியல், பொருளாதார சுயஅழிவிலிருந்து தேசத்தைக் காக்கும் பணியின் முன்னே அதன் கூட்டு மனோதிடம் வாடிப்போனதற்கு ஒப்பாகும்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
கையெழுத்திட்டது
கலாநிதி லயனல் போபகே
தலைவர் மற்றும் இணை அவைகூட்டுநர் (அவுஸ்திரேலியா)
அன்ரனி கிறேசியன் செயலாளர் (அவுஸ்திரேலியா)
ரஞ்சித் ஹேநாயக்க ஆராச்சிஇணை அவைகூட்டுநர் (ஜேர்மனி)
பேராசிரியர் சுரேஷ் சுரேந்திரன் இணை அவைகூட்டுநர் (ஐ.இ.)
தர்மசேன யகந்தவெல
இணை அவைகூட்டுநர் (கனடா)
இலங்கையில் ஜனநாயகத்திற்கான குரல், சர்வதேச வலையமைப்பு அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம், மெல்பன், அவுஸ்திரேலியா