வில்பத்து வனப்பகுதியை அண்மித்துள்ள மரச்சுக்கட்டி மற்றும் கரடிக்குளி காடுகளை அமைப்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தாது நீதிமன்றத்தை அவமதித்ததாக தாக்கல் செய்த மனுவிற்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
அந்த மனு இன்று (ஜூன் 28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட போது பிரதிவாதியாக இருந்த முன்னாள் அமைச்சரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பதியுதீன் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி பைஸ் முஸ்தபா, மனு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார்.
இதன்படி, குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், உரிய ஆட்சேபனைகளை ஜூலை 21ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு உத்தரவிட்டுள்ளது.
அப்போது மனுவை ஆகஸ்ட் 28ம் திகதி பரிசீலிக்க பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.