உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானத்துக்கு அரசாங்க நிதி பற்றிய குழு இன்று (30) அனுமதி வழங்கியது.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழு இன்றையதினம் இரண்டாவது நாளாகவும் கூடி குறித்த தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடியது.
நேற்றையதினம் (29) நடைபெற்ற கலந்துரையாடலில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி. நந்தலால் வீரசிங்ஹ, நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் திறைசேரியின் செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அது மாத்திரமன்றி இரண்டாவது அமர்வில் வங்கிகள், பொது நிதியங்கள், காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து குழு நிலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் குறித்த தீர்மானம் மேலதிக உறுப்பினர்களின் ஆதரவுடன் குழுவால் அனுமதிக்கப்பட்டது.
இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.