தமிழக அரசியல் களத்தில் அதிக ஆற்றலும், ஆர்வமும், நம்பிக்கையும் கொண்ட இளம் அரசியல்வாதியான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதியை சந்தித்து இலங்கை நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடினார்.
இலங்கை தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான அயல் நாடாக இருப்பதால், இருதரப்பு உறவு பல நூற்றாண்டுகளாக தொடர்கிறது. மேலும் தமிழ்நாட்டின் ஆதரவு இலங்கை மக்களால் எப்போதும் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுவதாக செந்தில் தொண்டான் கூறினார்.
இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி,
“தமிழ்நாடு வருகை தந்துள்ள இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் நம்மை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்கள். இலங்கையில் தற்போது நிலவுகிற சூழல், வட கிழக்கு & மலையகத் தமிழர்களின் நிலை, தமிழ்நாடு – இலங்கை உறவு என பல்வேறு அம்சங்களை இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடினோம். செந்தில் தொண்டைமான் அவர்களுக்கு என் அன்பும், நன்றியும்” என கூறியுள்ளார்.