கிழக்கு மாகாணத்தில் கடந்த 30 நாட்களில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மாகாண அமைச்சுக்களின் செயலாளர் மற்றும் திணைக்களத் தலைவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆய்வு செய்தார்.
8,000ற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் அவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை வழங்க புதிய இலவச சுகாதார மருத்துவ முகாம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, செயற்படுத்தப்பட்டமை, சுகாதாரத் துறைக்காக 38 புதிய கட்டிட நிர்மாண பணிகளை ஆரம்பித்தல் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பேரில், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி குழந்தைகளை தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்க முதல் முறையாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பேரில், குறைவான ஆசிரியர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு அதிகப்படியான ஆசிரியர்கள் இருக்கும் பாடசாலைகளில் இருந்து கால அட்டவணையின்றி ஆசிரியர்களை இடம்மாற்றம் செய்தல், கடந்த 2 ஆண்டுகளில் நிலுவையில் உள்ள அனைத்து ஒழுக்காற்று விசாரணைகளும் 90% முடிந்துள்ளமை, விசேட வேலைத்திட்டத்தின் கீழ் 50 முதல் 60 சதவீத பெறுபேறுகளைக் கொண்ட கல்வி வலயங்களை மேம்படுத்தி, குறைந்தபட்ச தரமான 70% பெறுபேறுகளைப் பேணுதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களாக இருக்கும் ஆசிரியைகளை அருகில் உள்ள பாடசாலைகளில் இணைக்க வேண்டும் என மீண்டும் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சிற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பேரில் 300ற்கும் அதிகமான விவசாயிகளுக்கு விவசாயத்தை மேம்படுத்த தண்ணீர் மோட்டார்கள் வழங்கப்பட்டன. 22 விவசாய சங்கங்களுக்கு மினி டேக்டர்கள் வழங்கப்பட்டன. மேலும் அவர்கள் அறுவடைக்காக விவசாயிகள் பயன்படுத்துவதற்காக 8 தண்ணீர் குளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
“கிளீன் பீச்” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, உள்ளாட்சி அதிகாரிகள் மூலம் இதுவரை 49 டன் பிளாஸ்டிக் மற்றும் 109 டன் பிளாஸ்டிக் அல்லாத குப்பைகள் கடற்கரைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக முழுமையடையாமல் இருந்த 7 பாதைகள் வீதி அபிவிருத்தி அமைச்சகத்திற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பேரில் முடிக்கப்பட்டு அடுத்த வாரம் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்படும். மிகவும் மோசமான நிலையில் காணப்படும் பாதைகளுக்கான வீதி பராமரிப்பு பணிகள் முன்னுரிமையின் கீழ் ஆரம்பிக்கப்படும்.
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பொது நிர்வாக ஆணைக்குழு மூலம் 571 ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலைக் கடற் பரப்பில் சுற்றுலாப் பயணிகளுக்கு கப்பல்கள் மற்றும் யட் பயணங்கள் அறிமுகப்படுத்துதல், படகு இல்லங்களுக்கான தடாகங்களை அடையாளம் காணுதல், மான் நகரமாக பிரகடனம் செய்தல், பாசிக்குடாவில் முதலைகளுக்கு உணவளிக்கும் நேரத்தை ஏற்பாடு செய்தல், தற்போது சுற்றுலாத் தலங்களில் காணப்படும் தெரு நாய்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 95% நிறைவடைந்துள்ளது.
இந்த விடயங்களின் மேலதிக முன்னேற்றம் குறித்து அடுத்து கூட்டத்தில் ஆராயப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.