கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் காணப்படுவதாக பரவிவந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் கடுமையாகவும் அவர்களை பொது கூட்டங்களில் மட்டந்தட்டியும் நடத்துவதாகவும் அதனால் ஆளுநருக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு கிளை போராட்டம் நடத்த உள்ளதாகவும் செய்திகள் பரவின.
இதன்பின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்த கிழக்கு ஆளுநர் சுமூக நிலையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்கு மாகாணத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்து வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமான் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு மாகாண சபை அதிகாரிகளுக்கு செந்தில் தொண்டமான் இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.