Sunday, November 24, 2024

Latest Posts

இஸ்ரேலின் இன அழிப்புத் தாக்குதலைக் கண்டித்து பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக யாழில் சனிக்கிழமை போராட்டம்!

பலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்புத் தாக்குதலுக்கு எதிரான கண்டனத்தை வெளிப்படுத்தும் முகமாக எதிர்வரும் சனிக்கிழமை (21) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் ஒன்றுகூடுமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

நேற்று (16) வெளியிட்டுள ஊடக அறிக்கையிலேயே அதன் இணைச் செயலாளர் த.ஸ்ரீபிரகாஸ் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“இஸ்ரேலின் தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பால் பலஸ்தீன மக்கள் மேற்கு கரையிலும் காஸாவிலும் சுருக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் அரசினதும் அதன் மேற்குலக கூட்டாளி நாடுகளினதும் அரசியல் பொருளாதார நலன்களுக்காக காஸா மக்கள் பலியாக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளும், பெண்களும் அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தகைய மக்களுக்கு எதிரான கொடூர தாக்குதலைக் கண்டிக்கின்றோம். அத்துடன் காஸா மீதான ஆக்கிரமிப்பு யுத்தமானது தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டு கொன்றழிக்கப்பட்டதற்கு ஒப்பானதாக பார்க்கப்பட வேண்டியதே. எனவே, ஒடுக்கப்படும் பலஸ்தீன மக்களுக்கு விடுதலை வேண்டி ஒருமித்து குரல் கொடுப்போம்.

இஸ்ரேலிய பயங்கரவாத ஆடசியினர் காஸா மக்களுக்கான உணவு, மருத்துவம், மின்சாரம், தண்ணீர் ஆகிய அடிப்படைத் தேவைகள் சென்றடைவதைத் தடுத்ததோடு பல கட்டடங்களைத் தரைமட்டமாக்கி மக்களையும் கொன்றொழித்து வருகின்றனர். எல்லா ஒடுக்குமுறைப் போர்களிலும் குழந்தைகளின் உடலங்களே உலக மக்களின் மனச்சாட்சியை உலுக்குவதாக அமைந்து விடுவது போல் காஸா குழந்தைகள் பூக்களாகவும், பிஞ்சுகளாகவும் கருகிக்கிடப்பது தாங்க முடியாத மனவேதனையைத் தருகின்றது. இந்த அனுபவங்களைத் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் சுமந்தனர்.

உலக வல்லாதிக்க நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா போன்றன இஸ்ரேலின் காஸா மக்கள் மீதான இன அழிப்புக்கு உடந்தையாக இருப்பதோடு ஏனைய நாடுகள் இந்த அழிப்பைத் தடுத்து விடக் கூடாது என்பதற்காக கடலிலும் தரையிலும் பாதுகாப்பு அரண்களாக யுத்தக் கப்பல்களையும் தமது படைகளையும் நிலைநிறுத்தியுள்ளன.

இதில் அவர்களின் அரசியல் பொருளாதார அதிகார நலன்கள் இருக்கின்றன. காஸா மக்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலை வேடிக்கை பார்த்து நிற்கும் அரபு நாடுகளும் ஏனைய நாடுகளும் தமது பொருளாதார நலனையும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு தமது அடிமை விசுவாசத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றன.

உக்ரேன், ரஷ்யப் போரில் ரஷ்யாவுக்கு எதிராகக் கண்டனங்களை வெளிப்படுத்தி நின்ற ஜக்கிய நாடுகள் சபை இங்கு அனுதாபங்களை மட்டுமே வெளிப்படுத்தி தனது பக்கச்சார்பை நிரூபித்து நிற்கின்றது. பாதுகாப்பான சுதந்திரமான பலஸ்தீன நாடு அமைவதை உலகின் பெரும்பாலான நாடுகள் குறிப்பிட்டு வருவது போன்று அந்த மக்களின் இறையாண்மைக்காகவும் சுதந்திர உரிமைக்காகவும் பலஸ்தீன மக்களுக்காக ஆதரவுக் குரல் கொடுப்பதற்கு எதிர்வரும் சனிக்கிழமை 10 மணிக்கு யாழ். மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் ஒன்றுகூடுமாறு வேண்டுகின்றோம்.” – என்றுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.