கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக வேலைத்திட்டத்தை “பெல்ட் அண்ட் ரோட்” வேலைத்திட்டத்தின் கீழான முதலாவது வேலைத்திட்டங்களாக கருதுவதாகவும், இலங்கை உற்பத்திகளை சீனாவிற்கு இறக்குமதி செய்யும் அதேநேரம், இலங்கைக்குள் சீன முதலீடுகளை அதிகளவில் மேற்கொள்வதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உறுதியளித்தார்.
சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கிடையிலான இருதரப்புச் சந்திப்பு நேற்று (20) சீன மக்கள் பொதுச் சபையில் நடைபெற்றது.
ஆரம்பகாலம் முதல் சீனா இலங்கைக்கு வழங்கி வந்துள்ள ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஷி ஜின்பிங் தொடர்ச்சியாக இலங்கையுடன் சிநேபூர்வமானதும், சுமூகமானதுமான நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கின்றமையையும் பாராட்டினார்.
இந்து சமுத்திரத்தின் பொருளாதார கேந்திர நிலையமாக இலங்கையை அபிவிருத்திச் செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
2048 இலங்கையை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றியமைப்பதே தனது இலக்காகுமென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த இலக்கைவெற்றிக்கொள்வதற்கு “பெல்ட் அண்ட் ரோட்” மூன்றாவது சர்வதேச மாநாட்டில் முன்மொழியப்பட்ட எட்டு அம்சக் கொள்கை பயனுள்ளதாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அதனையடுத்து காசா எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டு யுத்த நிலைமை தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்தாலோசித்தனர்.