இலங்கையின் 2 முன்னணி அரச வங்கிகளான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பன பெரும் தனியார் கடன் பெறுநரிடமிருந்து கடன் தொகையை அறவிடாது அல்லது செலுத்தா கடனாக கருதி அல்லது தள்ளுபடி செய்யப்படுவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும்,வங்கியின் வருமானத்தின் முக்கிய மூலமே கடனுக்கான வட்டி ஆகும் என்றும்,இவ்வாறு கடனை அறவிடாவிட்டால் பணப்புழக்க நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நாட்டில் பெருந்தொகையான நுண்,சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் தமது தொழில்களையும்,முயற்சியாண்மைகளையும் இழந்து நிற்கும் வேளையில், பரேட் சட்டத்தில் (Parate execution) இவர்களின் பெரும்பான்மையான சொத்துக்கள் போட்டிக்கு ஏலம் விடப்படுவதாகவும், இது பெரும் ஆபத்தான விடயம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மறுபக்கத்தில் அதிக அளவில் கடன் பெற்றவர்களிடமிருந்து, அரசியல் பலம், சொத்து பலம், மறைகரத்தின் பலம் போன்றவற்றால் அவர்களின் கடன் அறவிடப்படாதுள்ளதாகவும், நிறுவனமொன்று மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிகளுக்கு 700 மில்லியன் உத்தரவாதத்தை வழங்கி, ஏறக்குறைய 7 பில்லியன் தொகை கடன் பெற்றுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சாதாரண மனிதனுக்கு பரேட் சட்டமும் பெரும் வர்த்தகர்களுக்கு மற்றுமொரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து தெளிவான தீர்வை எதிர்பார்ப்பதாகவும், தெளிவான பதில் இன்றே வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தனிப்பட்ட விடயம், இரகசிய விடயம் என்றும் கூறி தகவல்களை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது என்றும், வங்குரோத்தாகியுள்ள நாட்டில், இதுபோன்ற காரணங்களை கூறி உண்மைகளை மறைப்பது ஏற்றுக் கொள்ள முடியா விடயம் என்றும், நாட்டில் ஒரே சட்டம் அமுலில் இருப்பதால், இந்நேரத்திலும் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் பரேட் சட்டம் தொடர்பில் நேற்று (24) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.