கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சில மாகாணங்களின் ஆளுநர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து இந்நாட்களில் திட்டமிடப்பட்ட வகையில் சில சமூக வலைத்தளங்களிலும் இணைய ஊடகங்களிலும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண ஆளுநர் பதவியிலும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் பதவியிலும் மாற்றம் ஏற்படுத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக தற்போது செயற்படும் செந்தில் தொண்டமானை ஊவா மாகாண ஆளுனராகவும் சப்ரகமுவ ஆளுநராக செயற்படும் நவீன் திஸாநாயக்கவை மத்திய மாகாண ஆளுநராகவும் இடமாற்றம் செய்ய ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும் அதன்படி கிழக்கு ஆளுநராக நசீர் அஹமட்டை நியமிக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் வதந்திகள் பரப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் லங்கா நியூஸ் வெப் இணையம் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி வினவிய போது அங்குள்ள நம்பத்தகுந்த தரப்பினர் கூறுகையில், அரசாங்கத்திற்கு அவ்வாறான ஒரு திட்டம் தற்போதைக்கு இல்லை எனவும் இது ஒரு போலிப் பிரச்சாரம் என்றும் கூறியதுடன் பதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சிலரால் காலம் காலமாக திட்டமிடப்பட்ட வகையில் செய்யப்படும் அரசியல் போலிப் பிரச்சாரம் என்றும் குறிப்பிட்டனர்.
குறிப்பாக கிழக்கில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக பாராளுமன்றம் தெரிவாகி பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளித்து அமைச்சுப் பதவி பெற்றிருந்த நசீர் அஹமட் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த சட்ட நடவடிக்கை ஊடாக பதவியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு தற்போது ஒன்றுமில்லாமல் இருக்கிறார்.
இவர் எப்படியாவது அரசாங்க பதவி ஒன்றிற்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் சில சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதரவாளர்களை வைத்து கிழக்கு ஆளுநர் பதவி தனக்கு வழங்கப்படவுள்ளதாக போலிப் பிரச்சாரத்தை முன்வைத்து வருவதாகவே தெரிகிறது.
அதற்கு சாதகமாக சப்ரகமுவ ஆளுனர் நவீன் திஸாநாயக்கவையும் இழுத்துப் போட்டுள்ளனர்.
எனினும் தற்போதைய கிழக்கு மற்றும் சப்ரகமுவ ஆளுநர்கள் மிகவும் சிறப்பாக செயற்பட்டு ஜனாதிபதிக்கு ஆதரவை அதிகரிக்கச் செய்து வருகின்றனர்.
இதனை நன்கு அறிந்த ஜனாதிபதி பல நிகழ்வுகளில் பகிரங்கமாகவே இவ்விரு ஆளுநர்களின் செயற்பாடுகளை அருகில் இருப்பவர்களிடம் கூறி மகிழ்ந்துள்ளார்.
கிழக்கு ஆளுநரின் செயற்பாடுகள் குறித்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்ட ஆளும், எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்கூட திருப்தியை வௌிப்படுத்தி உள்ளனர்.
இவ்வாறான நிலையில் கிழக்கு ஆளுநராக செயற்படும் செந்தில் தொண்டமானுக்கு பதிலாக புதிய ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக வௌியாகும் தகவல்கள் பொய் என்பது உறுதியாகிறது.
இது தொடர்பாக கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கருத்து கேட்க முயற்சித்த போதும் அவர் உத்தியோகபூர்வ விஜயமாக வௌிநாடு சென்றுள்ளதால் எமது முயற்சி பலனளிக்கவில்லை.
எனினும் ஆளுநர் பதவிகளில் தற்போது எவ்வித மாற்றமும் ஏற்படாது என ஜனாதிபதி தரப்பில் உள்ள நம்பத்தகுந்த வட்டாரங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நவீன திஸாநாயக்க சப்ரகமுவ ஆளுநராகவும் செந்தில் தொண்டமான் கிழக்கு ஆளுநராகவும் தொடர்ந்தும் நீடிப்பர்.