Thursday, December 26, 2024

Latest Posts

நீதி அமைச்சர் விஜயதாஸ பதவி விலக வேண்டும் – நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் எம்.பி. ஆவேசம்

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஸபக்ஷ கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்குப் பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த 4 ஆம் திகதி வரவு – செலவுத் திட்டத்தின் நீதி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் நான் கலந்துகொண்டு உரையாற்றிய விடயங்கள் தொடர்பாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றில் அறிக்கையிட்டிருந்தார். அவரது பேச்சில் குறிப்பாக என்னை ஒரு இனவாதியாகவும், எனது தந்தையை ஒரு முற்போக்குவாதியாகவும், இந்தச் சபையின் முன்னாள் உறுப்பினராக இருந்த எனது பாட்டனாரை ஒரு இனவாதியாகவும் சித்தரித்திருந்தார். அதில் என்னுடைய பாட்டனார் கம்பொலயில் ஆற்றிய உரையில் சிங்கள மக்களை அவமதித்தும், அவர்களைக் கீழ்த்தரமாகவும் கூறியதாகவும் கூறி அவரை ஒரு இனவாதியாகக் காட்டிக்கொள்வதற்காக தனது கருத்தை முன்வைத்திருந்தார்.

40 வருட அவருடைய அரசியல் வரலாற்றிலே ஒரே சம்பவத்தை மட்டுமே குறிப்பிட்டு அவரை ஒரு இனவாதியாக காட்ட நீதி அமைச்சர் முயன்றிருக்கின்றார். எந்தளவு தூரத்துக்கு அவர் கூறிய கருத்து உண்மையாக இருக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை. அதேபோன்று சிங்களவர்களுக்கு எதிரான இனவாதத்தை ஒரு பக்கம் காட்டிக்கொண்டு, இந்திய இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டு 6 இலட்சத்து 90 ஆயிரம் மலையக மக்களுடைய பிரஜாவுரிமையைப் பறிப்பதற்கு அமைச்சுப் பதவியைப் பெற்று ஆதரவளிக்கத் தயங்காதவராகவும், தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்தவராகவும்தான் ஜி.ஜி.பொன்னம்பலம் இருந்தவர் என்றும், அவருடைய பேரானாக அவரைப் போலவே இனவாதத்தைக் கக்குகின்ற ஒருவராக நான் இருக்கின்றேன் என்றும் நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஒரு நீதி அமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஷ என்னுடைய பாட்டனார் தொடர்பாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற நிலையில் – சட்டத்தை விளங்கிக் கொண்டும் சரியான தகவல்களோடு முன்வைக்க முடியாமல் தத்தளிக்கின்றார்.

மலையக மக்களுடைய பிரஜாவுரிமையைப் பறித்த சட்டம் இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம் 1948ஆம் ஆண்டு 18 ஆம் இலக்கச் சட்டம். அந்தச் சட்டம் மலையக மக்களுடைய பிரஜாவுரிமையை எப்படிப் பறித்ததென்றால் – இரண்டு சந்ததிகளுக்குப் பின்னுக்குச் சென்று அவர்கள் நிரந்தரமாக இந்தத் தீவிலே வாழ்ந்ததாக நிரூபிக்க வேண்டியதொரு நிபந்தனையை இட்டதால் – மலையக மக்களுக்கு அதனை உறுதிப்படுத்த முடியாமல் இருந்த காரணத்தால் அவர்களது பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது.

அந்த இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம் 1948ஆம் ஆண்டு 18 ஆவது சட்டத்தை தமிழ்க் காங்கிரஸ் முற்றாக எதிர்த்திருந்தது. ஜி.ஜி.பொன்னம்பலமும் அதை எதிர்த்திருந்தார். இதை நிரூபிப்பதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய வெள்ளி மலரின் கட்டுரை ஒன்றின் ஊடாக நிரூபிக்க விரும்புகின்றேன். அந்தக் கட்டுரையை ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பரம விரோதியாக அன்று அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகவும் இந்தச் சபையில் செயற்பட்டிருந்த அமிர்தலிங்கமே எழுதியிருந்தார். அந்த ஆவணத்தை இங்கே பதிவு செய்வதோடு, அதனை ஆவணப்படுத்துவதற்கும் இந்தச் சபைக்குச் சமர்ப்பிக்கின்றேன்.

அதில் ”தமிழ்க் காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேருவதற்கு முன்பே டி.எஸ்.சேனனாயக்க அரசாங்கம் இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. தமிழ்க் காங்கிரஸ் சார்பில் ஜி.ஜி.பொன்னம்பலமும் சா.ஜே.வே. செல்வநாயகமும் சட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜி.ஜி பொன்னம்பலத்தின் பரம விரோதியாகச் செயற்பட்ட ஒருவரே இதை எழுதியுள்ளார். இலங்கை பிரஜாவுரிமையைப் பறித்த சட்டத்தை ஜி.ஜி.பொன்னம்பலம் எதிர்த்தார் என்பதை அதில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் நிலை இவ்வாறிருக்க, ஒரு நீதி அமைச்சர் என்று சொல்லக்கூடிய விஜயதாஸ ராஜபக்ஷ இந்தச் சபையைப் பிழையாக வழி நடத்துவதற்காக அப்பட்டமான பொய்களையும் கூறியிலுருக்கின்றார். அதற்குப் பின்னர் டி.எஸ்.சேனநாயக்க சிங்களம் அல்லாத ஏனைய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பிய போது, காங்கிரஸுடனும் பேச்சு நடத்தினார். அப்போது அந்தப் பேச்சுகளிலே மலையக மக்களுடைய பறிக்கப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்று தமிழ்க் காங்கிரஸ் ஒரு நிபந்தனை விதித்திருந்தது. இதற்கு டி.எஸ்.சேனநாயக்க, தான் அதனை வாபஸ் பெற முடியாது; ஆனால், புதிய சட்டத்தைக் கொண்டு வந்து இந்த மலையக மக்களுக்குப் பிரஜாவுரிமையை வழங்குவதற்குரிய நடவடிக்கைகயை எடுப்பதாகக் கூறியிருந்தார். அந்தப் பேச்சுகள் ஊடாக இந்திய – பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டம் 1949 ஆம் ஆண்டு இலக்கம் 3 சட்டத்தைக் கொண்டு வருவதற்கு இணங்கினார்.

அந்தச் சட்டத்தில் இந்திய பாக்கிஸ்தானிய மக்கள் 10 வருடங்கள் இலங்கையில் தொடர்ந்து வாழ்ந்ததாக நிரூபிக்கும் பட்சத்தில் அவர்களுக்குப் பிரஜாவுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், பேச்சுகளுடாக அந்தக் கால எல்லையையும் குறைத்து தனிநபர் 10 வருடங்களாகவும், குடும்பம் 7 வருடங்களாகவும் இருந்ததாக நிரூபிக்கும் பட்சத்திலே இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெறுவதற்கான தகுதியைப் பெறுவார்கள் என்ற வகையிலே மாற்றியமைக்கப்பட்டது. ஆயினும், இந்தக் கால எல்லையை 5 வருடங்களாகக் குறைக்க வேண்டும் எனக் கேட்டும் டி.எஸ்.சேனநாயக்க அந்தக் கோரிக்கையை மறுத்திருந்தார். இந்தப் பேச்சுகளில் ஆரம்பத்திலிருந்து தலையிட்டு தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த ஜவர்கலால் நேரு, டி.எஸ்.சேனநாயக்க இதற்கு கீழ் இறங்கி வரப்போவதில்லை, ஆகவே, 85 வீதமான மலையக மக்களுடைய பிராஜாவுரமையை இதன்மூலம் பெற்றுக்கொண்டு ஏனையவற்றை பின்னர் பெற்றுக்கொள்ளலாம் என்று கேட்டதற்கிணங்கவே தமிழ்க் காங்கிரஸ் இந்தியா – பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டத்துக்கு ஆதரவை வழங்கினார்கள்.

மலையக மக்களுக்குப் பிரஜாவுரிமையை வழங்கும் சட்டத்துக்குதான் ஆதரவை வழங்கினரே தவிர பிரஜாவுரிமையை பறிப்பதற்கான சட்டத்தை காங்கிரஸ் எதிர்த்தே வாக்களித்திருந்தது. 1949 ஆம் ஆண்டு 3 ஆவது இந்திய பாக்கிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டத்தை தமிழ்க் காங்கிரஸ் ஆதரித்ததன் காரணமாகத்தான் மலையக் மக்களின் பெருந்தலைவராக இருக்கும் சௌமியமூர்த்தி தொண்டமான் கூட இந்த நாட்டின் பிரஜையாக அங்கீகரிக்கப்பட்டு இந்தச் சபையிலே மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தது.

உண்மை இவ்வாறிருக்க – இனவாத நோக்கத்திலும் எங்களை ஒரு தவறான தரப்பாகக் காட்டுவதற்கும், பொறுப்பாக நடத்து கொள்ளவேண்டிய அமைச்சர் என்ற வகையிலே, அதுவும் ஒரு நீதி அமைச்சர் என்ற வகையிலே மாபெரும் அநீதியொன்றை இந்த அமைச்சர் இந்த சபையிலே எனக்கெதிராகவும் எனது அமைப்புக்கு எதிராகவும் செய்திருக்கிறார். இதற்கும் மேலாக – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் எனது சக நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனை ஒரு கொலைகாரனாகவும் ஆயிரக்கணக்கில் மக்களைக் கொலை செய்தவராகவும் குறிப்பிட்டிருக்கிறார். இது ஒரு அப்பட்டமான பொய் மட்டுமல்ல, இந்த மாதிரியான கருத்தை வெளியிட்டதால் விஜயதாஸ ராஜபக்ஷ நீதியமைச்சர் என்ற பதவிக்குத் தகுதியில்லாதவர் என்பதை அவரே நிரூபித்திருக்கின்ற நிலையில் அவர் உடனடியாக இந்தப் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும். அல்லது மதிக்கப்படக்கூடியவராக அவர் இருப்பாரானால் இந்தப் பொய்களைக் கூறியதற்காக அவர் தனது பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும்.

கௌரவ சபையிலே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தமாக இந்த வகையான பச்சைப் பொய்களைச் சொல்வதை ஒரு போதிலும் ஏற்கமுடியாது. ஆகவே, இதற்குரிய நீதியை வழங்குவதற்காக சபாநாயகருக்கு இந்த விடயத்தை சமர்ப்பிக்கின்றேன்.

அடுத்ததாக நானும் கஜேந்திரனும் திட்டமிட்டு குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக வடக்கில் இருந்து ஆட்களை வாகனங்களில் ஏற்றி கிழக்குக்குக் கொண்டு சென்று நினைவுகூரலை செய்ததாகவும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சொல்லியிருந்தார். நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒரு கட்சியின் தலைவராகவும் இருக்கின்றேன். தாங்கள் நினைவுகூருகின்ற இடத்தில் தங்களுக்கு இராணுவமும் பொலிஸாரும் அச்சுறுத்துகின்றார்கள் என்றும், தங்களுக்குப் பயமாகவும் இருக்கின்றது என்றும், கிழக்குக்கு வாருங்கள் என்றும் மக்கள் கேட்ட நிலையில் நானும் கஜேந்திரனும் மட்டும் சென்றிருந்தோமே தவிர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆட்களை வாகனங்களில் கொண்டு சென்றிருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் -ஆரம்பத்திலிருந்தே எனது பேச்சில் நான் சுட்டிக்காட்டிய விடயம் என்னவென்றால் -2015 ஆம் ஆண்டிலும் விஜயதாஸ ராஜபக்ஷவே தான் நீதி அமைச்சராக இருந்தபோது, அப்போதைய வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீரவுடன் ஜெனிவாவுக்குச் சென்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்த மாட்டோம் என்ற உத்தரவாதத்தை சர்வதேச சமூகத்துக்கு வழங்கியிருந்தீர்கள்.

அதுமட்டுமல்ல நினைவு கூர்தல் தொடர்பாக அரசு எந்தத் தடையும் விதிக்கப்போவதில்லை என்றும் தொடர்ச்சியாக உறுதியளித்து வந்தீர்கள். அரசு இவ்வாறு சர்வதேச சமூகத்திடம் உறுதியளித்திருந்தும், பொலிஸார் நீதிமன்றங்களை நாடி நினைவேந்தல்களுக்கு எதிராக தடைகளை ஏற்படுத்தக் கோரி நீதிமன்றங்களுக்குச் சென்றிருந்தும், மூதூர் நீதிமன்றத்தைத் தவிர ஏனைய நீதிமன்றங்கள் நினைவேந்தல்களுக்குத் தடை விதிக்காமல், பொலிஸாரின் கோரிக்கைகளை நிராகரித்திருந்தது. இந்தநிலையில் கூட, நினைவு கூருவதற்குச் சென்ற பத்துப் பேரை கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையிலே அடைத்திருக்கிறார்கள். நீதிமன்றமே தடைவிதிக்காத நிலையில் – அரசே நினைவுகூர்தலைச் செய்ய முடியும் என்று சொல்லியிருக்கும் நிலையில் – பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்த மாட்டோம் என்று அரசு சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதியை மீறி, பொலிஸார் நடந்துள்ள விடயம் தொடர்பாகவே அரசு தலையிட வேண்டும் என்று கேட்டிருந்தேன்.

நீங்கள் சர்வதேச சமூகத்துக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் வழங்கிய வாக்குறுதியை நடைமுறைப்படுத்துவதற்கே தலையிடுமாறு கேட்டிருந்தேன். அமைச்சர் என்ற வகையில், தான் நீதிமன்ற விடயத்திலோ, பொலிஸாருடைய விடயத்திலோ, சட்டமா அதிபர் திணைக்கள விடயத்திலோ தலையிடுவது முறையல்ல என்றும், அது ஜனநாயக விரோதம் என்றும் விஜயதாஸ ராஜபக்ஷ தனது உரையில் குறிப்பிட்டு தன்னை ஒரு கடும் நேர்மையான ஆளாகக் காட்டிக்கொள்ள முற்பட்டிருந்தார். ஆனால், உண்மை என்னவென்றால் – இதே விஜயதாஸ ராஜபக்ஷதான் 2019 ஒக்டோபர் 22 ஆம் திகதி சண்டே ஒப்சேவர் பத்திரிகை பேட்டியொன்றில் இப்படி தனது பெருமையை கூறியிருக்கின்றார். அது என்னவென்றால் – “நான் நீதி அமைச்சர் என்ற வகையில் சட்டமா அதிபர் திணைக்களம் நடத்திய விசாரணையில் நேரடியாகத் தலையிட்டு கோட்டபாய ராஜபக்ஷவை அவன்காட் வழக்கில் கைதுசெய்வதை தடுத்து நிறுத்தினேன்” – என்று பெருமைப்பட்டுள்ளார்.

அதேபோன்று – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சாட்சி வழங்கிய இடத்தில் இவ்வாறு அவர் குறிப்பிட்டிருக்கின்றார். “நான் அவசர அவசரமாக ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் முன்னாள் பொலிஸ்மா அதிபருடனும் தொடர்பு கொண்டு கோட்டாபாய ராஜபக்ஷவைக் கைதுசெய்தால், அரசை தவறான முறையிலே சித்தரிக்கும் என்றும் சுட்டிக்காட்டி அந்தக் கைதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறி அந்தக் கைதை நிறுத்தியிருந்தேன்” – என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவரது இந்த நடவடிக்கைகள்தான் தலையீடுகள் ஆகும். அரசின் கொள்கை முடிவுகளுக்கு மாறாக அமைச்சர் என்ற வகையில் அதனுள் தலையிட்டு ஊழல் வாதிகளை காப்பாற்ற செயற்பட்டமைதான் தலையீடும் முறைகேடுமே தவிர, நான் குறிப்பிட்ட – அரசே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம், நினைவுகூரலாம் என்று கூறிய விடயங்கள் – அரசின் கொள்கையாக சர்வதேச மட்டத்துக்கு உறுதி வழங்கியிருக்கவும், அதைப் பொலிஸார் மீறுகின்ற போது, அமைச்சர் அதில் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்ற எனது கோரிக்கை தொடர்பாக அமைச்சர் செயற்படுவதும் ஒரு தலையீடாக இருக்க முடியாது. மாறாக – தவறு நடப்பதை சீர்ப்படுத்தும் செயற்பாடாகவே அது அமையும். ஆகவே – இப்படிப்பட்ட ஒரு நிலையில் – இந்த நீதி அமைச்சர் மிக மோசமாக இந்தச் சபையை பிழையாக வழிநடத்த முயற்சித்து எங்கள் தொடர்பாக அப்பட்டமான பொய்களையும் சொல்லியிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதோடு விஜயதாஸ ராஜபக்ஷ நீதி அமைச்சர் என்ற பதவிக்குத் தகுதியற்றவர் என்ற விடயத்தையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இறுதியாக – இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என்று நான் கூறியபோது – ஒரு சில படங்களைச் சபைக்குக் காட்டியிருந்தார். அந்தப் படங்கள் விடுதலைப் புலிகளுடைய தலைவரின் முகமும் விடுதலைப் புலிகளின் சின்னமும் பொறிக்கப்பட்ட ரீ சேட் போடப்பட்ட படங்களாகும். அப்பொழுது மிகத் தெளிவாக நான் குறிப்பிட்டிருந்தேன். ஒருவேளை – மிகப் பாரதூரமான நிலைமையொன்று உருவாகியிருந்தால், பாரிய தாக்குதல் நடைபெற்று நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் சீர்குலையும் நிலைமை உருவாகியிருந்தால் – இந்தப் பயங்கரவாதத் தடைச்ச சட்டம் நீக்கப்பட வேண்டிய ஒரு கொடூரமான சட்டமாக இருந்தாலும், அந்த சூழ்நிலையைக் கட்டுப்படுத்த வேறொரு சட்டமும் இல்லாத இடத்தில் அதனைப் பாவிப்பதானால் சிலவேளைகளில் நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால், ரீசேட் அணிவதோ அல்லது அரசே விரும்பி அனுமதித்த நினைவுகூரலை செய்வதையோ தடுப்பதற்கு இந்தச் சட்டத்தைப் பாவிப்பது தவறென்பதைத் தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

ஆகவே, இந்த அமைச்சர் செய்யாது விட்டாலும், இந்த அரசு தலையிட்டு அந்தத் தவறைச் சரிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

இதற்கு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பதிலளிக்கையில்,

“நாங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று கூறிய விடயத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதற்குப் பதிலாக இன்னொரு சட்டம் கொண்டு வருதற்கு எடுத்த முயற்சிகளுக்கு எதிர்ப்புக்கள் ஏற்பட்டதால் அதனை நிறைவேற்ற முடியாத நிலையிலேயே இந்தச் சட்டம் தொடர்ந்தும் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த விடயத்தைதான் நாட்டினுடைய சட்டம் என்னும் கோணத்தில் தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தேன்.” – என்றார்.

அதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. பதிலளிக்கையில்,

“நான் எனது பேச்சிலேயே குறிப்பிட்டிருக்கின்றேன், பாரிய தாக்குதல் ஒன்று நடைபெற்றிருந்தால் நீங்கள் இந்தச் சட்டத்தை மீள நடைமுறைப்படுத்துவது பற்றி யோசிக்க முடியும் என்று தெரிவித்திருந்தேன். நான் கதைக்கும் விடயம் என்னவெனில் – அரசும், நீதிமன்றமும் அனுமதி கொடுத்த நிகழ்வில் கலந்துகொள்வதைத் தடுப்பதற்குப் பொலிஸார் அந்தச் சட்டத்தைபி பயன்படுத்துவதைத்தான் நான் கடுமையாகக் கண்டித்து நீங்கள் அதனை அனுமதிக்கக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதேபோன்று – யாழ்ப்பாணத்தில்தான் நீங்கள் படங்களில் காட்டிய ரீசேட் சம்பவம் நடந்திருந்தது. கிழக்கில் அப்படி நடந்திருக்கவில்லை. கிழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு நியாயத்தையும் உங்களால் சுட்டிக்காட்ட முடியாது. யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவம் தொடர்பாகவும், அந்தச் சம்பவத்தை விசாரிக்க வேண்டாம் என்றும் நான் கோரவில்லை. ஆனால், அதையும் கூட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டிய விடயம் அல்ல. சாதாரண சட்டத்தின் கீழ்தான் விசாரிக்கபட வேண்டும் என்பதை மட்டுமே நான் சொல்லியிருந்தேன். ஏனெனில் அது பயங்கரவாதச் செயற்பாடு அல்ல. இப்படிப்பட்ட செயற்பாடுகளையும் நீங்கள் பயங்கரவாதமாகக் கருதி செயற்படுவதுதான் மிகக் கொடூரமான விடயமாக சர்வதேச சமூகமே கருதி அதைச் செய்யாதீர்கள் என்று சொல்லி வருகின்றது.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.