Friday, January 17, 2025

Latest Posts

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு

நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும், இன்று நாடு நிறைவேற்ற வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகள் எனவும் எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அந்த இரு இலக்குகளை அடைவதில் தன்னுடன் இணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் அதேவேளையில், நல்லிணக்கம் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, எதிர்வரும் மார்ச் மாதம் அது தொடர்பான விசேட அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

பதுளை குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் நேற்று (27) கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரேயொரு முஸ்லிம் தேசிய பாடசாலையான குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை பாடசாலை மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர்.

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியின் புதிய இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:

நாட்டின் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் வகையில், அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு உலக நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளோம். இந்த வேலைத்திட்டத்துடன் நாம் முன்னோக்கிச் சென்றால், நிச்சயமாக நாட்டில் நிலையான பொருளாதாரத்தை உருவாக்க முடியும். அதேநேரம் நாட்டின் ஏனைய பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.

நாட்டில் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது முதல் விடயமாகும். இரண்டாவது விடயம் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகும். ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல, நாட்டில் நல்ல பொருளாதாரம் மற்றும் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அத்துடன் இலங்கையர் என்ற அடையாளம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைத்து மக்களும் இலங்கையர்களே. இன்று எமது நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சிங்கள அடையாளத்தையும், மதத்தையும், கலாசாரத்தையும் பாதுகாத்து முன்னோக்கிச் செல்ல நாம் செயற்படுகின்றோம். ஏனைய இனத்தினரையோ, மதத்தினரையோ ஒருபோதும் சிறுமைப்படுத்தக்கூடாது. நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அனைவரும் இலங்கையர்களாக முன்னோக்கிச் சென்றால் மட்டுமே வளமான நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

அத்துடன் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சரவையில் கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். கொவிட் காலத்தில் இறந்த முஸ்லிம்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரச்சினை எழுந்தது. அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஏனைய நாடுகள் அது பற்றிய முடிவுகளை பிற்காலத்தில் மாற்றிக்கொண்டாலும், இலங்கையில் அந்த முடிவுகளை மாற்ற நீண்ட காலம் எடுத்தது.

அதற்கான காரணங்களை ஆராய்ந்து, அத்தகைய நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருக்க சட்ட ரீதியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இறுதிச் சடங்குகளை எப்படிச் செய்வது என்பது அந்தந்த மதத்தின்படி முடிவு செய்யப்பட வேண்டும். இது குறித்து எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதமளவில் அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்க்கிறேன்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதில் சில தவறுகள் நடந்திருந்தன. அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி செயல்படுகிறோம். புத்தகங்கள் தருவிப்பது மற்றும் எகிப்தில் இருந்து போதகர்களை அழைத்து வருவது உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளன. முஸ்லிம் மதக் கல்விக்கு அவை முக்கியமானவை என்பதால் அந்தப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும். மத்ரஸாக்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமூலமொன்றை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது முன்வைக்கப்படவில்லை.
இதுபோன்ற முஸ்லிம் மக்களைப் பாதிக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. மேலும் சிலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. பயங்கரவாதத்துடன் தொடர்பில்லாத பட்சத்தில், நாட்டில் புரட்சியை ஏற்படுத்த அழைப்பு விடுக்காதபட்சத்தில், கருத்துக்களை வெளியிட அனுமதிக்க வேண்டும். சட்டம் அந்த பாதுகாப்பை முழுமையாக வழங்க வேண்டும். இந்த விடயங்களில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அதிகாரிகளிடம் அறிக்கை கோரியுள்ளேன்.

அவற்றைப் பெற்றுக்கொண்ட பின்னர், எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் முழு அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்க்கிறேன். அதற்கு முன், மதத் தலைவர்களையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து, இந்த அனைத்து விடயங்கள் குறித்தும் ஆராய உள்ளேன். அதற்கு அனைவரும் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.