வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த இளைஞன் தொடர்பிலான வழக்கு!

0
208

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் தொடர்பிலான வழக்கு கட்டளைக்காக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (02) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பெற்றது.

சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட காயங்கள் உடலில் காணப்பட்டதாகவும் இதனால் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, 21 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல் தோற்ற அடிப்படையில் இது மனித ஆட்கொலை என நீதிபதி தெரிவித்தார்.

மேலும் இரண்டாவது சாட்சி ஐந்து பொலிஸார் சித்திரவதை செய்ததாக தெரிவித்த நிலையில் மேலதிக சந்தேக நபரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி மன்றில் முன்னிலைப்படுத்துமாறு இந்த வழக்கின் விசாரணைப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.

மேலும் குறித்த குற்றத்தில் பொலிஸார் ஈடுபட்டிருப்பதால் நீதிமன்ற கட்டளையின் பிரதியை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்புமாறு மன்று கட்டளையிட்டது. இது சித்திரவதைக்கு உள்ளான மனித ஆட்கொலை வழக்கு என்பதால் மேல் நீதிமன்றத்திலேயே இறுதியான தீர்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்த நீதிபதி வழக்கின் குற்றப் பத்திரத்தினை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கு சட்டமாஅதிபருக்கு அறிவுறுத்தியதுடன் மூல வழக்கை சட்டமாஅதிபருக்கு அனுப்பி வைக்குமாறு மன்றின் பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் சந்தேக நபர்கள் நாலவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here