வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி சுகாதார சேவையின் தொழிற்சங்கங்கள் சில ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்று காலை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்துடன், சுகாதார ஊழியர்கள் கடந்த செவ்வாய்கிழமை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்ததுடன், நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.
இவ்வாறானதொரு பின்னணியில், வைத்தியசாலை செயலாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், சுகாதார பணி உதவியாளர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களும் நேற்று காலை 6 மணி முதல் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்து இன்று காலை 8.00 மணியுடன் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரவி குமுதேஷ், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி தலையிடாவிட்டால் எதிர்காலத்தில் மீண்டும் தொழில்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.