படல்கும்புர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வரதொல வத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் 21 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மொனறாகலை மாவட்டத்துக்கான பிரதி பணிப்பாளர் நாயகம் ஏ.எச். ரவீந்திர குமார தெரிவித்தார்.
குறித்த பகுதியில் நேற்று 12 ஆம் திகதி முதல் சிறு அளவில் மண்சரிவுநிலை காணப்பட்டதாகவும், இன்று (13) பாரியளவு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இப்பகுதியில் இருந்த 5 வீடுகளைக்கொண்ட லயன் குடியிருப்பொன்று முழுமையாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. 16 வீடுகள் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.
வெளியேற்றப்பட்ட மக்கள் தற்போது உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக வரதொல சிங்கள பாடசாலையில் பாதுகாப்பு மத்திய நிலையமொன்று அமைக்கப்படவுள்ளது.
இக்குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பிரதி பணிப்பாளர் நாயகம் மேலும் கூறினார்.