யுக்திய சுற்றிவளைப்பில் இன்று (14) முதல் தீவிரமாக இணையுமாறு பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து பிராந்தியங்களுக்கும் பொறுப்பான அதிகாரிகள், மாவட்டங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கு இந்த விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 42,248 பேரின் பட்டியல் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யுக்திய செயற்றிட்டத்தின் கீழ் எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் தமது பொலிஸ் பிரிவை உள்ளடக்கிய வகையில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு, பட்டியலிடப்பட்டுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக அனைத்து குற்றப்புலனாய்வு அதிகாரிகளையும் 24 மணித்தியால சேவையில் ஈடுபடுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, யுக்திய சுற்றிவளைப்பின் போது நாட்டில் காணப்படும் சட்டக் கட்டமைப்பிற்குள், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்திற்கு அமைய செயற்படுமாறு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால், பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யுக்திய சுற்றிவளைப்பின் நோக்கம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் முறைப்பாடுகள், வெகுசன ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வௌியிடப்பட்டுள்ள தகவல்கள் ஆகியன தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சில விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால், பதில் பொலிஸ்மா அதிபருக்கு அது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.