Thursday, January 16, 2025

Latest Posts

போர்க்களமானது கிளிநொச்சி ; ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் காட்டுமிராண்டித்தனம் ;சிறீதரன் எம்.பி. மீதும் தாக்குதல்; பல்கலை மாணவர்கள் கைது

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் இன்று தமிழர் தரப்பு மேற்கொண்ட எதிர்ப்புப் பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை, தடியடி நடத்தியதால் பெரும் களேபரம் ஏற்பட்டது.

ஏ – 9 வீதியில், இரணைமடுவுக்கு அண்மையாகப் போர்க்களம் போல் காட்சியளித்தது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இரணைமடு சந்தியில் இருந்து போராட்டம் ஆரம்பித்து, கிளிநொச்சி நகரை நோக்கி நகர்ந்த போது, பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் வீதியின் குறுக்கே தடுப்பு அமைத்து, பேரணியைத் தடுத்தனர்.

இந்தப் பேரணியில் பங்கேற்க 5 பேருக்கு நீதிமன்றம் தடை பிறப்பித்திருந்த நிலையில், பொலிஸார் பேரணியை நகர அனுமதிக்கவில்லை.

பேரணியின் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், தடியடியும் மேற்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் தரதரவென வீதியில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

மாணவர்களைக் காப்பாற்றுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் முயன்றனர். பொலிஸாரால் இழுத்துச் செல்லப்பட்ட மாணவன் ஒருவரைக் காப்பாற்ற சிறீதரன் எம்.பி., அவரின் மேல் கவசம் போல் படுத்து காப்பாற்ற முயன்றார். பொலிஸார் அந்த மாணவனை இழுத்து எடுக்க முயன்றனர்.

இந்த இழுபறியின்போது பொலிஸார் தன்னைத் தாக்கினர் என்று சிறீதரன் எம்.பி. குற்றஞ்சாட்டினார்.

பொலிஸாரால் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 5 மாணவர்களின் விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. கவிதரன், மிதுசன், எழில்ராஜ், அபிசேக், நிவாசன் ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஏ – 9 வீதியின் ஒரு பகுதியை மறித்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

நீண்ட இழுபறியின் பின் மாணவர்களின் விடுதலை தொடர்பான பேச்சுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இருவர், ஆசிரியர் சங்கப் பிரதிநிதி ஒருவர் ஆகியோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் சென்றனர். அவர்கள் அங்கு நடத்திய பேச்சின் பின்னர் கைதான 5 மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதன்பின்னர் போராட்டமும் நிறைவுக்கு வந்தது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.