Saturday, January 18, 2025

Latest Posts

பலாலி விமான நிலைய விரிவுபடுத்தலுக்காக 500 ஏக்கர் காணி சுவீகரிப்பு என்பது தவறு

பலாலி விமான நிலைய விரிவுபடுத்தலுக்காக மக்களின் 500 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்படவுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை எனவும், அப்படி எந்தவிதமான எண்ணமும் இந்தியாவிற்கு இல்லை எனவும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தம்மிடம் தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சிலரை நேற்று (16) இரவு யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தியத் தூதுவருடன் பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். நாங்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்தால் ஏனைய பிரச்சினைகள் தானாகவே தீரும் என்ற அடிப்படையில் அவருடைய எண்ணங்கள், கண்ணோட்டம், பேச்சுக்கள் இருப்பதை அவதானித்தேன்.

இந்தியாவையும் இலங்கையையும் பாலம் அமைத்து அதனூடாக ஓர் இணைப்பை ஏற்படுத்தல் சம்பந்தமாக இந்தியத் தூதுவர் குறித்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டு வந்திருக்கின்றார். ஆகவே, இலங்கை – இந்திய தரைவழி இணைப்பு சம்பந்தமான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என நம்புகின்றேன்.

பத்திரிகைகளில் 500 ஏக்கரை காணிகள் சுவீகரிக்கப்போவதாக வெளியான செய்திகள் எமக்குப் பேரதிர்ச்சியைத் தந்ததையும் நான் இந்தியத் தூதுவருக்குச் சுட்டிக்காட்டினேன்.

விமான நிலையத்தின் அபிவிருத்திக்குத் தற்போது விமான நிலையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளே போதுமானவை என்பதை இந்தியத் தூதுவரிடம் நான் தெளிவுபடுத்தியிருந்தேன்.

பலாலி விமான நிலைய விரிவுபடுத்தல் சம்பந்தமாக மக்களின் 500 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்படவுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை எனத் தூதுவர் சந்தோஷ் ஜா என்னிடம் தெரிவித்திருந்தார். அப்படி எந்தவிதமான எண்ணமும் தமக்கு இல்லை எனவும், இந்தியா அரசிடம் எதுவிதமான காணிகளைப் பெற்றுத்தருமாறு கோரவில்லை எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

மேலும், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டால் தமிழ் மக்களுடைய வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும். அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியல் ரீதியாகவும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இந்தியத் தூதுவர் தெரிவித்தார்.” – என்று கூறினார் விக்னேஸ்வரன் எம்.பி.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.