ஒரு தசாப்தத்திற்கு முன்னர் வடக்கின் மன்னார் பிரதேசத்தில் கண்டறியப்பட்ட மனித புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பான காபன் பரிசோதனைகள் மேலும் தாமதமாகுமென இந்த வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சடடத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வளாக மனித புதைகுழி குறித்த வழக்கு விசாரணை கடந்த திங்கட்கிழமை (மார்ச் 14) மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணைகளில் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகும் சடடத்தரணி வி. எஸ். நிரஞ்சன் நிதியை பெற்றுக்கொடுப்பது குறித்த செயற்பாட்டில் காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தின் பணிகள் தாமதமடைவதாக குறிப்பிட்டார்.
“C14 பரிசோதனைக்காக எலும்பு மாதிரிகள் அனுப்பப்படவிருந்த நிலையில் அதற்கான நிதி வசதி செய்வதற்காக, காணாமல் போனோருக்கான அலுவலகத்திடம் அதற்கான விலை மனு கோரப்பட்டு இருந்தது. அவர்கள் அதற்கான பதிலை இன்று (மார்ச் 11) அளிக்க முடியாத நிலை காணப்பட்டமையால் அதற்கு பிரிதொரு தவணையை கேட்டுக்கொண்டமைக்கு அமைய இந்த வழக்கு மே 13ஆம் திகதி அழைக்கப்படவுள்ளது.”
மேலும் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி நிரஞ்சன், கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நிதி குறித்த கோரிக்கை காணாாமல்போனோர் குறித்த அலுவலகத்திற்கு விடுக்கப்பட்டதாகவும், ஆகவே அவர்கள் இந்த பணிகளை மேற்கொள்வவதில் காலத்தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
காபன் பரிசோதனைக்குத் தயார்
திருக்கேதீஸ்வரம் வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் எக்காலத்திற்குரியது என்பதை கண்டறிவதற்கான காபன் பரிசோதனையை மேற்கொள்வதற்கான (கதிரியக்கக்கார்பன் காலக்கணிப்பு – C-14 Carbon Dating Test) மாதிரிகள் பெறப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் தனஞ்சய வைத்தியரத்ன தெரிவிக்கின்றார்.
எலும்புக்கூட்டு அகழ்வுப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டவன் என்ற அடிப்படையில், இந்தப் பணியை மேற்கொள்ளத் தான் தயார் என வைத்தியர் தனஞ்சய வைத்தியரத்ன குறிப்பிடுகின்றார்.
“மரண பரிசோதனைக்குப் பின்னர் குறித்த எலும்புக்கூடுகள் எந்தக் காலத்திற்குரியது என்பது தொடர்பில் கண்டறிய காபன் பரிசோதனை என ஒன்று உள்ளது. அதனை அமெரிக்க ஆய்வுக்கூடத்தில் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு மாதிரிகளை நாம் எடுத்துள்ளோம். அதனை மேற்கொள்ளுமாறு நீதிமன்ற கட்டளை ஒன்றும் உள்ளது. அந்த மாதிரிகள் நீதிமன்ற வழக்கு பொருட்கள் களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாதிரிகளை அமெரிக்க ஆய்வுக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும். அதற்கு செலவு ஒன்று ஆகும்தானே? அதிகாரி ஒருவர் செல்ல வேண்டும். மரண பரிசோதனையை செய்தவர் என்ற அடிப்படையில் நான்தான் மாதிரிகளை எடுத்துக்கொண்டு அமெரிக்காச் செல்ல வேணடும். சென்று ஒப்படைக்க வேண்டும். மாதிரியை பரிசோதிப்பதற்கு கொடுப்பனவு ஒன்றை ஆய்வுக்கூடத்திற்கு செலுத்த வேண்டும். ஆகவே இந்த நிதியை நீதிமன்றத்தால் வழங்க முடியாதல்லவா? ஆகவே ஓஎம்பியிடம் இதற்கு நிதியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கலாம். எனினும் அரசாங்கம் நிதியை கொடுத்தால் நான் நான் அமெரிக்காச் சென்று பணிகளை மேற்கொள்ள முடியும்.”
ஒரு தசாப்தம்
2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் நீர் விநியோகத்திற்கென அகழ்வுப் பணியில் ஈடுபட்டவர்களினால் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மன்னார் பொலிஸார் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட குறித்த பகுதியை பார்வையிட்டதோடு, 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
மன்னார் நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைய, திருக்கேதீஸ்வரம் பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது பாரிய மனித புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டடது.
தொடர்ந்து இடம்பெற்ற அகழ்வுப் பணிகளுக்கு அமைய 81 மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டுள்ளதாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் நீதிமன்றில் தொடர்ந்து முன்னிலையாகிவரும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.
இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் வலிந்து காணாமலாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை எவ்வித தகவல்களும் வெளியவரவில்லை.
திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களுடையதாக இருக்கலாம் என 2,000 நாட்களைக் கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களான தமிழ்த் தாய்மார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.