தேர்தல் முறை மாற்றம் என்ற போர்வையில் மாகாண சபை தேர்தலை ஒத்திவைத்தது போல பாராளுமன்றத் தேர்தலையும் ஒத்தி வைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
புதிதாக அரசாங்கம் முன்மொழிந்துள்ள தேர்தல் முறை மாற்றம் என்பது சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை கேள்விக்குறியாக்கும் விடயமாகும். குறிப்பாக வடக்கு கிழக்கு தவிர்ந்த தென் இலங்கையில் வாழுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்துவதைநோக்கமாகக் கொண்டதே இந்த முன்மொழிவாகும்.
புதிய தொகுதிவாரி தேர்தல் முறை சீர்திருத்தத்தை சிறிய கட்சிகளும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது அரசுக்கு தெரியும். இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை இழுத்தடிப்புச் செய்வதற்கு ஒரு வாய்ப்பை தேடுவதே புதிய முன்மொழியின் நோக்கமாகும்.
பிரதேச சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை பேசுவதற்கு தளமாக இருந்த மாகாண
சபைகளை மக்கள் பிரதிநிதிகள் அற்ற சபைகளாக மாற்றுவதற்கு கடந்த அரசாங்க காலத்தில் முன்மொழிந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் முறை மாற்றம் என்ற அஸ்திரமே காரணமாகும்.
சிறுபான்மை மக்களின் குரல்வலைகளை நசுக்குவதற்காக அதே சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற பிரதிநிதிகளின் ஒட்டுமொத்த ஒத்துழைப்போடு மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதே பாணியை பின்பற்றி பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைத்து ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படுவதற்கு தற்போதைய பாராளுமன்றத்தில் அங்கத்தவராக இருக்கின்றவர்கள் ஒரு போதும் ஒத்துழைக்கக் கூடாது.
தற்போதைய தேர்தல் முறையை மாற்றி எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் கலாச்சாரம் ஒன்று நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என்பது ஜனநாயகத்தை விரும்பும் அனைவரதும் எதிர்பார்ப்பாகும். அதற்கு நீண்ட கலந்துரையாடலும் இனங்களுக்கு இடையிலான இணக்கப்பாடும் அவசியமாகும். அத்துடன் சிறுபான்மை மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்தில் ஏற்படுத்துவதற்கு மிகச் சரியான பொறிமுறையும் அவசியமாகும்.
தற்போது நாடு செல்லுகின்ற பாதை புதிய சிந்தனையை விதைப்பதற்கு பதிலாக எவ்வாறு இனவாதத்தை செழிப்படையச் செய்து அதில் அரசியல் அறுவடையை மேற்கொள்ளலாம் என்பதையே இலக்காகக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு முன்னணி அரசியல் கட்சியும் சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாசைகளை ஏற்றுக்கொள்ளும் தெளிவான சிந்தனையில் இல்லை.
தமிழர்களின் உரிமைகளைப் பற்றி பேசினால் சிங்கள பெரும்பான்மை மக்களின் கோபத்துக்கு உள்ளாக வேண்டும் என்ற பயத்தில் பல கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள். முற்போக்கு கொள்கைகளைக் கொண்டவர்கள் என தம்மை காட்டிக் கொள்ளும் அரசியல் கட்சிகளும் இதே நிலைப்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையில் தேர்தல் முறையை மாற்றி நிலைமை சிக்கலாகுவதற்கு பதிலாக உடனடியாக முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்தி மக்கள் இறமையுள்ள அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் எனவும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்