Friday, November 22, 2024

Latest Posts

மட்டக்களப்பில் காணி மாஃபியா! மக்களே கவனம் – ஆதாரத்துடன் அம்பலம்!!

மட்டக்களப்பு வாகரை மாங்கேணி பகுதியில் உள்ள தனது சொந்த காணி தொடர்பில் சில ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக குறித்த காணியின் உரிமையாளரான கருப்பையாபிள்ளை குமாரநாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த காணி தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் சில அரச அதிகாரிகளை சுட்டிக்காட்டி வெளியிடப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் அவற்றை காணி உரிமையாளர் என்ற வகையில் தான் முழுமையாக நிராகரிப்பதாகவும் கருப்பையாபிள்ளை குமாரநாயகம் தெரிவித்துள்ளார்.

மாங்கேணியில் உள்ள தனது காணி தொடர்பில் எழுந்துள்ள குழப்பகரமான நிலை குறித்து ‘லங்கா நியூஸ் வெப்’ இணையத்திடம் விளக்கம் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த காணியை வேறு நபர்கள் அபகரித்துள்ளதாகவும் அந்த நபர்களுக்கு காணியை வழங்குவதற்கு 5 மில்லியன் ரூபா கப்பம் கோரப்படுவதாகவும் இவற்றின் பின்னணியில் கிழக்கு மாகாண ஆளுநருடன் தொடர்புடைய நபர்கள் செயல்படுவதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.

கிழக்கு மாகாணத்தில் அரசியல் ரீதியாக சூனியமாகி போய், எதுவுமே செய்ய முடியாது சேறு பூசும் அரசியல் மற்றும் டீல் அரசியல் செய்து வரும் சிலர் கொமிஷன் பணத்திற்காக இவ்வாறான பொய் பிரச்சாரங்களை ஊடகங்களுக்கு பரப்பி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது விடயம் குறித்து தகவல் திரட்டிய ‘லங்கா நியூஸ் வெப்’ நேரடியாகவே காணி உரிமையாளரான கருப்பையாபிள்ளை குமாரநாயகம் என்பவரிம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பின்வருமாறு விளக்கம் அளித்தார்.

“மாங்கனி மத்திய கிராம சேவகர் பிரிவில் உள்ள எனது 40 ஏக்கர் காணி 1986 ஆம் ஆண்டு யுத்தம் நடந்த காலத்தில் இராணுவ முகாம் அமைக்கும் தேவைக்காக அப்போதைய பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர்களால் எழுத்து மூலம் என்னிடமிருந்து கையகப்படுத்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டு அங்கு இராணுவ முகாம் திறக்கப்பட்டதாக எனக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது. (அதன் ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளது)

அதன் பின்னர் இந்திய இராணுவ நடவடிக்கையின் போதும் எனது காணியில் இருந்த தென்னை உள்ளிட்ட மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டன. அது ஒரு துன்பமான வரலாறு. அப்போதைய நாட்டு சூழ்நிலையில் என்னால் காணியை மீள பெறுவதற்கு ஒன்றும் செய்ய முடியவில்லை.

எனினும் தற்போது யுத்தம் முடிவடைந்து அமைதியான சூழ்நிலை காணப்படுவதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட இவ்வாறான பல காணிகள் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதால் இராணுவம் எனக்கு திருப்பித் தந்த எனது காணியில் நானும் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளேன்.

ஏற்கனவே இந்த காணி என்னுடைய பாவனையில் இருப்பதன் காரணமாக அதனை நீடித்து தருவதற்கான கோரிக்கையை கிழக்கு மாகாண காணி அமைச்சிடம் முன்வைத்து அதற்கான அனுமதியை காணி பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் ஊடாக பெற்றுக் கொண்டுள்ளேன்.

தற்போது இந்த காணி என்னிடமே உள்ளது. இங்கு எவரும் காணியை கையகப்படுத்தவோ அல்லது அத்துமீறல் செய்யவோ வரவில்லை” என்று கூறினார்.

இந்த காணியை காட்டி கப்பம் பெறும் விடயம் தொடர்பில் அவரிடம் நாம் வினவிய போது, “என்னுடைய காணியை காட்டி இன்னொருவரிடம் கப்பம் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை தனக்கு இல்லை. அதேபோன்று எனது காணிக்காக யாருக்கும் கப்பம் கொடுக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை” என்று கூறினார்.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் ஏதேனும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என கேட்டபோது,

“காணிக்குள் எவரேனும் அத்துமீறல் செய்தால் அது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்ய முடியும். ஆனால் அப்படி எவரும் எனது காணிக்குள் அத்துமீறல் செய்யவில்லை. ஊடகங்களில் வெளியான செய்திகள் பிழையானவை. காணி எனது பாவனையில் உள்ளது. அதில் நான் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்த்துள்ளேன்” என்றார்.

இது விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண காணி பதிவாளர் திணைக்களத்திடம் நாம் வினவிய போது, கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பதவியேற்று 2023 மே மாதம் 17ஆம் திகதிக்கு பின்னர் இன்றுவரையான குறுகிய காலப்பகுதிக்குள் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சுமார் 8196 குடும்பங்களுக்கு காணி உரிமம் மற்றும் காணி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த குடும்பங்கள் அனைத்தும் 30 தொடக்கம் 40 வருடங்கள் எவ்விதமான காணி ஆவணங்களும் இன்றி மிகவும் சிரமப்பட்டு வந்ததாகவும் இந்த நளிவடைந்த குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநரின் துரித நடமாடும் சேவை நடவடிக்கை ஊடாக காணி பத்திரங்களை வழங்கி வைக்க முடிந்ததாகவும் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வேறு எந்த மாகாணங்களிலும் இந்த செயற்பாட்டை காண முடியாது என்றும் கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு காணி உரிமமும் காணி அனுமதிப் பத்திரமும் வழங்கப்பட்டதாகவும் இது ஆளுநரின் செயல் திறன்மிக்க நிர்வாகத்தின் ஊடாக சாத்தியப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

காணி விடயம் குறித்து வதந்திகள் வருவதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிகாரிகள் சிலரிடம் வினவினோம். கிழக்கு ஆளுநர் தனது அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தி காணி அனுமதி பத்திரங்கள் வழங்கி சட்டவிரோத காணி மாஃபியா கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதால் காணிகளை கையகப்படுத்தி வைத்துக்கொண்டு பண மோசடி செய்பவர்கள் சிக்கலில் விழுந்துள்ளதாகவும் அவ்வாறான நபர்களே மட்டக்களப்பு மாவட்ட காணி விடயத்தில் தவறான தகவல்களை வதந்திகளை பரப்பி வருவதாகவும் சில அதிகாரிகள் கூறினார்.

குறிப்பாக ஈரோஸ் பிரபா என்பவர் (இராஜநாயகம் பிரபாகரன்) தன்னுடைய மோசடிகளை மறைப்பதற்கு இணையம் ஒன்றுக்கு இவ்வாறு பிழையான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் இவர் சில அரச அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து காணிகளை களவாடி பொய் பத்திரங்கள் தயாரித்து ஏமாற்று வேளை செய்து வருவதையும் மற்றவர்களை ஏமாற்றி பணம் கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதையும் இவரது இரண்டாவது மனைவி அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அம்பலப்படுத்தியதாகவும் தெரிவித்தனர். (குறித்த காணொளி இணைப்பு).

  • இவ்வாறு மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்தும் ஈரோஸ் பிரபா போஔன்றவர்களே மட்டக்களப்பு காணி விடயத்தில் பொய் வதந்திகளை பரப்பி வருவதாகவும் இவ்வாறான பொய் களவாடிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
  • திறமையாகவும் துணிச்சலாகவும் பக்கச்சார்பற்ற வகையிலும் செயற்பட்டு கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களையும் சமநிலையில் அரவணைத்துச் செல்லும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் ஈரோஸ் பிரபா போன்ற குள்ள நரிகளின் சித்து விளையாட்டு செல்லுபடியாகாது என அவர்கள் கூறுகின்றனர்.
  • எதிர்காலத்தில் இவ்வாறான நபர்களை இனங்கண்டு கிழக்கு மாகாணத்தில் காணி மாபியாவை இல்லாதொழித்து சட்ட நடவடிக்கை எடுக்க ஆளுநர் செயற்படுவார் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் இதுவரை வழங்கப்பட்டுள்ள காணி உரிமம் மற்றும் அனுமதி பத்திரம் தொடர்பான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.