Sunday, November 24, 2024

Latest Posts

அரசாங்கத்தின் தீர்மானங்களை கம்பனிகள் மீற முடியாது – வடிவேல் சுரேஷ் எம்.பி!

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்களை பெருந்தோட்டக் கம்பனிகள் மீறி நடக்க முடியாது என்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கச் செயலாளரும் பெருந்தோட்ட விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பிரச்சினையை பேசித் தீர்மானிப்பதாக கம்பனிகள் கூறுகின்ற போதிலும் அவ்வாறு அந்தக் கம்பனிகள் செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

டொலர் பெறுமதி அதிகரிப்பால் பெருமளவில் இலாபமீட்டிய பெருந்தோட்ட கம்பனிகள் தங்களது ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்காமல் இழுத்தடிப்புச் செய்வைதையிட்டு கம்பனிகள், வெட்கித் தலைகுனிய வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்,

“பல சுற்றுகளாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டிருக்கிறது.

ஆனால் இது தொடர்பாக சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்கெடுப்பதை முதலாளிமார் சம்மேளனம் தொடர்ச்சியாக புறக்கணித்து வந்தது. இது சம்பள விவகாரத்தில் தொழிலாளர்களை ஏமாற்றும் முயற்சியாகவே எமக்கு தெரிகிறது.

அதனால் தொழில் ஆணையாளரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டபூர்வமாக 1700 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டிருக்கிறது. 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு கோரிய போதும் முதலாளிமார் சம்மேளனம் இதுபோன்ற இழுத்தடிப்புக்களையே செய்திருந்தது.

அதற்காக அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். டொலர் பெறுமதி அதிகரித்தால் தோட்டப் கம்பனிகள் அவர்களுக்கு கிடைத்த இலாபத்தின் நிவாரணங்களை தொழிலாளர்களுக்கு வழங்காமல் தற்போது இழுத்தடிப்புச் செய்வது நியாயமற்றது.

இவ்வாறு கம்பனிகள் அரசாங்கத்தின் தீர்மானங்களை மீறி நடக்க முடியாது. அதற்கான அதிகாரம் கம்பனிகளுக்கு இல்லை. இப்போது உயர்மட்ட குழுவுடன் பேசித் தீர்மானிப்பதாக பெருந்தோட்ட கம்பனிகன் கூறுகின்றன. மொத்தமாகவுள்ள 22 பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் ஐவர் மாத்திரமே சொந்தக்காரர்களாக உள்ளனர். இவர்கள் தேயிலை துறை மாத்திரமின்றி சுற்றுலா, சிறுபோக உற்பத்தி பயிர்கள், மாணிக்க கல் அகழ்வு தொழில் துறைகளிலும் வலுவாகச் செயற்படுகிறார்கள்

அதேநேரம் சம்பள விவகாரத்தில் இழுத்தடிப்புச் செய்யும் கம்பனிகள் 20 கிலோ கொழுந்து நாளாந்தம் பறிக்கப்பட வேண்டியது அவசியம் என்ற நிபந்தனையை விதிக்கின்றன. ஆனால், ஊழியர்கள் அச்சமின்றி தொழிலுக்குச் செல்லும் வகையில் கம்பெனிகள் தோட்டங்களை பராமரிப்பதில்லை.

எவ்வாறாயினும் பேச்சுவார்த்தையாக மாத்திரமே இருந்து வந்த சம்பள விவகாரத்தை வர்த்தமானியில் அறிவித்தமைக்கு ஜனாதிபதிக்கும் தொழில் அமைச்சருக்கும் நன்றி கூற வேண்டியது அவசியம்.

அதேபோல், இந்த விடயத்தில் தோட்ட தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் ஒற்றுமையாக இருந்து சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்” என்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கச் செயலாளரும் பெருந்தோட்ட விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.