இந்திய-இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்திய கடற்படைக்கு சொந்தமான ராணி துர்காவதி என்ற படகில் கமாண்டர் பிரதீப்குமார் தலைமையில் ரோந்து சென்றபோது, கோடியக்கரைக்கு தென் கிழக்கே 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் சந்தேகத்துக்கு இடமாக பைபர் படகுகள் வந்தது தெரியவந்தது.
இதையடுத்து எல்லை தாண்டி 5 பைபர் படகுகளில் வந்ததாக 14 இலங்கை மீனவர்களையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், இலங்கை மீனவர்கள், இந்திய எல்லையில் சிலிண்டர் சுவாச கருவி மூலம் தடை செய்யப்பட்ட கடல் அட்டையை பிடித்தது தெரிய வந்தது.
இதையடுத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினர் 14 மீனவர்களையும் கைது செய்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
‘கடல் அட்டை இந்திய எல்லையில் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் தடை விதிக்கப்படவில்லை. இந்திய எல்லையில் தடைவிதித்த கடல் அட்டையை பிடித்து கூடுதல் விலைக்கு சீனா போன்ற நாடுகளில் விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து படகு மற்றும் கடல் அட்டை பிடிக்க பயன்படுத்திய உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று 17ம் திகதி ஆஜார் படுத்தப்படவுள்ளனர்’ என்றனர்.