Thursday, November 28, 2024

Latest Posts

சம்பந்தன் மறைவுக்கு தமிழக தலைவர்கள் இரங்கல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் : இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தமிழர்கள் மட்டுமல்லாது இலங்கை மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் மரியாதையைப் பெற்ற அரும்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர் சம்பந்தன் .

இறுதிமூச்சு வரையிலும் தமிழ்மக்களின் நலனுக்காகவே சிந்தித்தார், செயல்பட்டார். நாடாளுமன்றவாதியாக அரைநூற்றாண்டு காலம் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இலங்கையின் அரசியலில் பாரதூரமான தாக்கத்தைச் செலுத்தி வந்தன. இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்காக மிக நீண்டகாலம் அறவழியில் சம்பந்தன் அவர்கள் போராடி வந்தார்.

இந்தியாவோடும் தமிழ்நாட்டுடனும் மிகச் சிறந்த நட்புறவை சம்பந்தன் பேணி வந்தார். கருணாநிதியின் நண்பராகவும், இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் பல முறை அவரைச் சந்தித்து மிகவும் முக்கியமான அரசியல் விவகாரங்கள் குறித்து சம்பந்தன் ஆலோசித்துள்ளார்.

ஈழத்தந்தை செல்வா, நாவலர் அமிர்தலிங்கம் ஆகியோருக்குப் பிறகு இலங்கை அரசியலில் மிகவும் போற்றத்தக்க தலைவராக விளங்கிய சம்பந்தன் அவர்களின் இடத்தை இலங்கை அரசியலில் எவராலும் எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவு இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் பேரிழப்பாகும்.

இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த மாபெரும் அரசியல் ஆளுமையான சம்பந்தனை இழந்து தவிக்கும் அவரது அமைப்பினருக்கும் இலங்கைத் தமிழ் உறவுகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ் : இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திரிகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான பெரியவர் இரா. சம்பந்தன் முதுமை காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பினர், ஈழத்தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்த இரா.சம்பந்தன், ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே போர் மூள்வதை தடுக்க இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியவர். அவரது மறைவு ஈழத்தில் தமிழர்களுக்கு உரிமைகளையும், அதிகாரங்களையும் வென்றெடுத்துத் தரும் முயற்சிகளுக்கு பெரும் இழப்பு ஆகும்.

டிடிவி தினகரன் : இலங்கையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருமான சம்பந்தன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காக குரல் எழுப்பி வந்த முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தனை இழந்துவாடும் உறவினர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அன்புமணி இராமதாஸ்: இலங்கையின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான பெரியவர் இரா. சம்பந்தன் முதுமை காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடிப்படையில் வழக்கறிஞரான இரா.சம்பந்தன் தமது வாழ்நாள் முழுவதையும் இலங்கை இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக அர்ப்பணித்துக் கொண்டவர். அதற்காக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களிடம் மன்றாடியவர். கடந்த அரை நூற்றாண்டில் இந்தியாவின் பிரதமர்களாக இருந்த அனைவரிடமும் நட்பு பாராட்டியவர்.

இலங்கை இறுதிப் போருக்குப் பிறகு ஒன்று பட்ட இலங்கை என்ற அமைப்புக்குள்ளாகவாவது ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடி வந்தார். நான் ஸ்ரீலங்கன் என்று பொதுவெளியில் முழங்குவதற்கு கூட தயாராக இருக்கிறேன்; ஆனால், ஒருபோதும் இரண்டாம் தர குடிமகனாக வாழ விரும்பவில்லை என்று முழங்கியவர். அவரது விருப்பத்திற்கிணங்க இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தருவது தான் அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும்.

இரா. முத்தரசன் : இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்மந்தன் மறைவுக்கு இரங்கல் இலங்கை தமிழர் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா.சம்மந்தன் (91) நேற்று இரவு திரிகோணமலையில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு வேதனை அடைந்தோம். இரா.சம்மந்தன் இலங்கை தமிழர்களின் சம உரிமைக்காக இடைவிடாது குரல் கொடுத்து வந்தவர். 1977 ஆம் ஆண்டில் திரிகோணமலை தொகுதியில் இருந்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

பேரினவாத ஆட்சியாளர்களால் 1983 ஆம் ஆண்டில் தமிழர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்ட நேரத்தில் அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து, நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணித்தவர். இதனால் 1983 செப்டம்பர் 7 ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பை இழந்தார். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு 2015 – 18 காலகட்டத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக செயல்பட்டவர்.

இலங்கை தமிழர் உரிமைகளுக்காக போராடிய அமைப்புகளை ஒருங்கிணைத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கி அதன் தலைவராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தமிழர்களின் நன்மதிப்பை பெற்ற இரா.சம்மந்தன், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். அவரது இழப்பு எளிதில் ஈடு செய்ய முடியாதது.

அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இலங்கை தமிழ் சகோதரர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.