மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவுக்கு நீதி கோரி நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி சிகிச்சைக்காக வருகை தந்த நிலையில், நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்களின் அசமந்தப்போக்கு காரணமாக உயிரிழந்த சிந்துஜா மரியராஜ்ஜின் மரணம் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாட்டால் இறந்தவருக்கு நீதி வேண்டும், இப்படி இன்னொரு கொலை நடைபெறக்கூடாது என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் சிந்துஜாவின் தாய், சிந்துஜாவுக்குப் பிறந்த குழந்தை ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெண்கள் அமைப்பினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.