2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளின் முடிவுகளை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடுவதற்கு முன்னர், சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை வெளியிடுவதும், அரசியல் மேடைகளில் தவறான முடிவுகளைக் குறிப்பிடுவதும் தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் போலியான முடிவுகளை வெளியிடுவது அல்லது அரசியல் தளங்களில் தபால் வாக்கு முடிவுகளை குறிப்பிடுவது அரசாங்க அதிகாரிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
இவ்வாறான போலியான முடிவுகளை வெளியிடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளும் சமூக ஊடகங்களில் இந்த நாட்களில் பரவலாகக் காணப்படுகின்றன. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக இடம்பெற்றதாகவும், அது தொடர்பில் எவ்வித அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச உத்தியோகத்தர்களுக்கு எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.