ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட இரண்டு ஆணைக்குழுக்களினதும் அறிக்கைகள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிடம் இருந்தால் அவற்றை சமர்ப்பிக்க அரசாங்கம் மூன்று நாள் கால அவகாசம் வழங்குவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
”ஈஸ்டர் குண்டுத் தாக்குல் தொடர்பில் இரண்டு விசாரணை ஆணைக்குழுக்களும் மேற்கொண்ட அறிக்கைகள் தம்மிடம் இருக்கின்றன. குறித்த இரண்டு அறிக்கைகளையும் நாட்டு மக்களுக்கு வெளியிட அரசாங்கத்துக்கு ஏழு நாட்கள் கால அவகாசத்தை வழங்குகிறோம்.ஏழு நாட்களுக்குள் அறிக்கைகளை வெளியிடாவிட்டால் அவற்றை நாம் வெளியிடுவோம்.” என நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் பிவிதுறு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பில் நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத்,ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட இரண்டு ஆணைக்குழுக்களினதும் அறிக்கைகள் உதய கம்மன்பிலவிடம் இருந்தால் அவற்றை சமர்ப்பிக்க அரசாங்கம் மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்குகிறது.
அது கிடைக்கப்பெற்றால் எமக்கு இலகுவாக இருக்கும்.அரசாங்கத்திடமிருக்கும் அறிக்கைகளை உரிய விதிமுறையின் கீழ் பரிசீலனை செய்து வருகிறோம். அவற்றில் பக்கங்கள் குறைந்துள்ளனவா அல்லது என்ன நடந்துள்ளது என ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளோம். அது நிச்சயமாக செய்யப்படும்.
அந்த அறிக்கைகள் கம்மன்பிலவுக்கு கிடைத்திருந்தால் அதனை உடனடியாக கையளிக்குமாறு கோருகிறோம். இவ்வளவு காலம் அந்த அறிக்கைகளை அவர் மறைத்து வைத்திருந்தால் அதுவும் பாரிய குற்றமாகும். அதேபோன்று அவருக்கு அந்த அறிக்கைகள் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.” என்றார்.