Sunday, November 24, 2024

Latest Posts

‘பார் லைசன்ஸ்’ பெறவில்லை என்றுசத்தியக் கடதாசியை உடன்வழங்க வேண்டும் சுமந்திரன் – மொட்டுவின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் வலியுறுத்து

“இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் பார் லைசன்ஸ் பெற்றனர் என்று மக்கள் கூறுகின்றனர். இது அந்தக் கட்சிக்கே களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைப் போக்குவதற்குச் சத்தியக் கடதாசியை உடனடியாக வழங்கி கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஐன பெரமுன கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போது பார் லைசன்ஸ் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரித்ததாவது:-

“பார் லைசன்ஸ்சோ – சாராயக் கடைகளோ யாருக்கும் இதுவரையில் பெற்றுக்கொடுக்கவில்லை எனச் சத்தியக் கடதாசி ஒன்றை அண்மையில் கொடுத்திருந்தேன். அதேபோல் என்னுடைய சக வேட்பாளர்கள் இதில் முக்கியமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய சத்தியக் கடதாசியைக்  கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன்.

ஏனென்றால் தற்போது பரவலாகப் பேசப்படுகின்ற பார் லைசன்ஸ் விவகாரத்தில் யார், யார் இந்த பார் லைசன்ஸ்சை உண்மையில் பெற்றுக் கொடுத்தார்கள் என்று மக்களுக்குத் தெரிய வேண்டும்.

ஏனெனில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தாங்களாக தங்களுக்குத் தேவையானவர்களைத் தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்பியிருந்தார்கள. அவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இவர்களை நாடாளுமன்றம் அனுப்பியது சாராயக் கடைகளை வாங்குவதற்காக அல்ல.

ஆகவே, யார் யார் வாங்கினார்கள் என்பது வாக்களித்த மக்களுக்குக்  கட்டாயம் தெரிய வேண்டும். ஆனால், இந்த உண்மையை வெளிப்படுத்த வேண்டிய புதிய ஆட்சியாளர்கள் கூட அதனை வெளிப்படுத்தத் தயங்குகின்ற நிலைமைதான் உள்ளது.

ஆனாலும், இவர்கள் ஏன் தயங்குகின்றார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. இதனாலேயே இந்தத் தேர்தலில் போட்டியிடும் முக்கியமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து வேட்பாளர்களும் பார் லைசன்ஸ் வாங்கவில்லை எனச் சத்தியக்  கடதாசியைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

ஆனாலும், இதுவரைக்கும் எவரும் அப்படியான சத்தியக் கடதாசியை கொடுத்ததாகக் காணவில்லை. இவ்வாறான நிலைமையில் ஒவ்வொரு நாளும் நாங்கள் பார்க்கின்றபோது சாரயக் கடை சம்பந்தமாக முன்னாள் எம்.பி. சுமந்திரன் ஊடகங்களில் கதைத்துக் கொண்டிருக்கின்றார்.

உண்மையில் எங்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியான அரசியல்வாதி. அவரைப் பார்த்துத்தான் நாங்களும் சில விடயங்களை அதிலும் அவருடைய உரைகளில்தான் நாங்களும் சில அரசியல் விடயங்களைப் படித்துக் கொள்கின்றோம்.

ஆகவே, அவர் எங்களுக்கு எல்லாம் ஒரு முன்மாதிரிதான். ஏனெனில் நாங்கள் இப்போதுதான் புதிதாக அரசியலுக்குள் வந்திருக்கின்றோம். அவர் எங்களை விட மூத்த கௌரவமான அரசியல்வாதி. அதனால் அவரைப் பெரும் மரியாதையோடு பார்க்கின்றோம்.

எனவே, நாம் கேட்டது போல அவர் ஒரு முன்மாதிரியாக ஒரு சத்தியக்  கடதாசியைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் சாராயக் கடை சம்பந்தமாக உண்மை தெரிய வேண்டும் என்று ஜனாதிபதியிடமும் சென்று கதைத்திருந்தவர்.

அவ்வாறு முதலில் அவரே ஒரு சத்தியக் கடதாசியைக் கொடுத்து அவரது கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் சத்தியக் கடதாசியைக்  கொடுக்கச் சொல்லிக் கேட்கலாம். ஏனெனில் அவருடன் அரசியல் செய்பவர்கள்தான் இம்முறை அந்தக் கட்சியில் நாடாளுமன்றத்  தேர்தலும் கேட்கின்றார்கள். ஆகவேதான் இதனை முன்மாதிரியாகச்  செய்யுங்கள் என சுமந்திரனை மரியாதையுடன் கேட்கின்றோம்.

ஏனெனில் வாக்களித்த மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். அதாவது பார் லைசன்ஸ் வாங்கினார்களா? இல்லையா? என்பது தெரிய வேண்டும். அதைவிடுத்து யாரையும் சேறு பூசுவது எங்களது நோக்கமும் அல்ல.

இவ்வாறு சத்தியக் கடதாசியை வெளிப்படுத்தியதன் பின்னர் யாரும் பார் லைசன்ஸ் வாங்கினார்களா? இல்லையா? என்று உண்மை தெரிய வந்ததன் பின்னர் மக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.

அதனால்தான் சுமந்திரனை மிக மரியாதையுடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால் உங்கள் கட்சியை களங்கம் இல்லாத கட்சியாகக் காட்ட வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கின்றபடியால் நீங்கள் இதனைச் செய்யுங்கள்.

நாங்கள் கிராமங்கள் தோறும் மக்களிடம் செல்கின்றபோது தமிழரசுக் கட்சி ஆட்கள் பார் லைசன்ஸ் வாங்கியதாகத்தான் சொல்கின்றார்கள்.

உங்கள் கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்தக் களங்கத்தைப் போக்குவதற்கான ஒரேயொரு நபர் நீங்கள்தான். உங்களால்தான் இந்தக் களங்கத்தைப் போக்க முடியும். ஆகவே, சத்தியக் கடதாசியாகக் கொடுத்து முன்மாதிரியாகச் செயற்படுங்கள் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.