Tuesday, November 26, 2024

Latest Posts

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள்: யாழ்.பொலிஸில் முறைப்பாடு

பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்பட்டுப் பயணித்த தமிழ் இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை யாழ்ப்பாணம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்து வருகின்ற போரில் புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் வலுக்கட்டாயாக இணைக்கப்படுகின்றனர் என்று அண்மைக்காலமாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தன.

இந்நிலையில், யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் சுற்றுலா விசா ஊடாக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற வேளை வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார் என்று வெளியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி மேற்படி இளைஞர் இலங்கையிலிருந்து பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல வேண்டும் என அவருக்கு வெளிநாட்டு முகவர்களினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய விமான நிலையத்தில் தரையிறங்கிய இளைஞருடன்

முல்லைத்தீவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரும், குருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் ஒன்றாக இணைந்து பயணித்துள்ளனர்.

இவர்கள் அனைவரையும் ரஷ்ய விமான நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்வதாக முகவர் குறிப்பிட்டு இளைஞர்களை அழைத்துச் சென்றுள்ளார்.

அதனையடுத்து அங்குள்ள இராணுவ முகாமில் இவர்களைத் தங்க வைத்து இவர்களுக்கு ரஷ்ய இராணுவத்தின் சீருடைகள் வழங்கப்பட்டு 15 நாட்கள் கட்டாயமாக பயிற்சியின் பின்னர் உக்ரைன் நாட்டின் எல்லையில் போருக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக குருநகர் பகுதியைச் சேர்ந்த கோமஸ் அதிஸ்ரராஜா மிதுர்ஷன் தாயாருக்கு தனது புகைப்படங்களைத் பகிர்ந்துள்ள நிலையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பயணத்துக்காக முகவர் ஒருவருக்கு ஒவ்வொருவரும் தலா 60 இலட்சம் ரூபா வரையான பணத்தைச் செலுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்களின் பெற்றோர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, சுமார் 280 இற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் ரஷ்ய

படைகளோடு இணைந்து, உக்ரைனுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகின்றனர் என்று அண்மையில் தகவல் ஒன்று வெளியாகியது. அவ்வாறு இணைந்துள்ள இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரை உக்ரேன் இராணுவம் உயிருடன் கைது செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற காணொளி ஒன்றும் கடந்த 21ஆம் திகதி வெளியாகியிருந்தது.

இலங்கையில் உள்ள ரஷ்ய மாபியாக்கள், மூலமாக ரஷ்ய இராணுவத்துக்கு

ஆட்கள் திரட்டப்படுவதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையிலேயே தமிழ் இளைஞர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றிருந்த நிலையில் வலுக்கட்டாயமாக ரஷ்ய படைகளில் இணைக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.