Sunday, December 22, 2024

Latest Posts

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் : டக்ளஸ் தேவானந்தா

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் என முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்த தேர்தலில் எமக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனை சமாளிக்க அரசியலில் தற்காலிக ஓய்வு என்றும் கூறலாம். அமைச்சராக இருந்த போது, தலைக்கு மேலாக வேலை இருந்தது. தற்போது அது இல்லை.

இதனால் கட்சிக்குள் உள்ள குறைப்பாடுகளை நீக்க அது தொடர்பில் ஆராய்கிறோம். குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் , கட்சியின் கொள்கை தொடர்பில் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மிக விரைவில் கட்சியின் தேசிய மாநாட்டையும் நடாத்த உள்ளோம்.

டக்ளஸின் வீழ்ச்சிக்கும், அநுராவின் எழுச்சிக்கும் சமூக வலைத்தளங்களே காரணம். சமூக வலைத்தளங்கள் ஊடாக எனக்கு எதிராக பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டனர்.

தற்போது சமூக ஊடகங்கள் குடிசை கைத்தொழில் போன்று பலருக்கும் வருமானம் ஈட்டிக்கொடுக்கிறது. என்னுடைய பெயரை பயன்படுத்தி அவர்கள் வருமானம் பெற்றுக்கொள்வதால், அவர்களின் வருமானத்தை தடுக்க விரும்பாததால், அவர்களின் வீடியோக்களை பெரிது படுத்தவில்லை.

முன்னைய காலங்களில் செய்திகளை பத்திரிகைகள் , தொலைக்காட்சிகள் , வானொலிகள் ஊடாகவே பார்க்க முடியும். தற்போது கையில் போனுடன் , மலசல கூடம் முதல் படுக்கையறை வரையில் சென்று வீடியோக்களை பார்க்க கூடிய நிலைமை இருப்பதால் , அது இலகுவில் மக்கள் மத்தியில் சென்றடைகிறது.

அவ்வாறான சமூக ஊடகங்கள் ஊடாகவே என் மீது அவதூறுகள் பரப்பப்பட்டன. குறிப்பாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் எனக்கு எதிராக அவதூறுகளை பரப்பினார். அவர் நாவற்குழி பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசத்தை நிரப்பி அங்கு ஒரு பெற்றோல் செட் போட முனைந்தார். அதற்காக என்னிடம் உதவி கோரினார்.

அந்த இடத்தில் நிறுவினால் வெள்ள அனர்த்தம் ஏற்படும் என்பதுடன், அது பெற்றோல் செட் போடுவதற்கு உகந்த இடமில்லை என்பதனால , அதற்கு நான் அனுமதி பெற்றுக்கொடுக்க உதவவில்லை.

அதேவேளை, கட்சியின் நிதி தேவைக்காக அவருடன் சில வர்த்தக உறவுகளையும் பேணி வந்தேன். ஆனால் அவர் நேர்மையற்றவராக முறைகேடுகளில் ஈடுபட்டமையால், அவருடனான வர்த்தக உறவை கைவிட்டேன். அதனாலேயே, அவர் என் மீது தேர்தல் காலத்தில் அவதூறுகளை பரப்பினார். அது கூட என் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.